This article is from Jan 25, 2021

உபி-யில் ஜெய்ஸ்ரீராம் எனக் கூறி கழிப்பிடத்தை உடைத்தது ஏன் ?

பரவிய செய்தி

உத்தரபிரதேசத்தில் பெண்கள் யாரும் கழிப்பிடத்தை உபயோக படுத்தகூடாது என்று சங்கிகள் உடைக்கும் காட்சி, தாழ்த்தபட்ட பெண்கள் திறந்தவெளியில்தான் போக வேண்டுமாம், இதில் என்ன கொடுமை என்றால் கொலை செய்யும்போதும் சரி தவறான செயலில் ஈடுபடும்போது சரி சாமி பெயரை சொல்லி செய்கிறார்கள் இந்த சங்கி கும்பல் !

Facebook link | Archive link  

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் கழிப்பிடத்தை பயன்படுத்தக் கூடாது என வலதுசாரி அமைப்பினர் அங்குள்ள கழிப்பிடத்தை இடிப்பதாக ஜாகிர் ஹுசைன் அன்சாரி என்பவர் பகிர்ந்து இவ்வீடியோ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை பெற்று வைரலாகி வருகிறது.

வீடியோவில் கழிப்பிடத்தை இடிக்கும் போது ஜெய்ஸ்ரீராம் எனக் கூறி கொண்டே இடித்துள்ளனர். இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் 700 கி,மீ தொலைவில் உள்ள சஹரன்பூர் பகுதியின் மாநில பேருந்து நிலையத்தில் சீரமைத்து கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் கோவிலுக்கு அருகே அமைந்து இருந்த காரணத்தினால் கோபமடைந்த வலதுசாரி ஆதரவாளர்கள் கழிப்பிடத்தை உடைத்ததாக ஜனவரி 20-ம் தேதி வெளியான NDTV, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஜனவரி 21-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகள் கிடைத்தன.

Twitter link | Archive link

அகில பாரத இந்து மகாசபாவின் உறுப்பினர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், சிறுநீர் கழிக்கும் கழிப்பிடத்தை ஏன் இடித்தார்கள் என ஊடகங்களிடம் கூறி இருக்கிறார். ” எங்களின் சக ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு இங்குள்ள கழிப்பிடத்தை அகற்றுமாறு கேட்டுக் கொண்டனர். இங்குள்ள கோவிலைக் காணலாம், இது 100 ஆண்டுகள் பழமையானது. மக்கள் கோவில் சுவற்றில் சிறுநீர் கழிக்கிறார்கள். நாங்கள் இறுதி எச்சரிக்கைக் கொடுத்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. எனவே, நாங்கள் இந்த விசயத்தை எங்களின் கைகளில் எடுத்துக் கொண்டோம் ” எனக் கூறியதாக NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.

கழிப்பறை வளாகத்தின் பராமரிப்பாளரான பிம்லா கூறுகையில், ” இது 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கழிப்பறை வளாகம். இதைப் பற்றி முன்பு யாரும் புகார் செய்யவில்லை. சமீபத்தில் இது சீரமைக்கப்பட்டது. நீங்கள் இந்தக் கழிப்பறையைப் பார்க்கிறீர்கள் என்றால், இங்கு நிரம்பி வழிகின்ற வடிகாலிற்கும் ஏதாவது செய்யுங்கள் என அவர்களிடம் கூறினேன். ஆனால், வடிகால் பேருந்து நிலையத்தை நடத்துபவர்களின் பொறுப்பு என என்னிடம் கூறினர். நிறைய பேர் பேருந்து நிலையத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு சிறுநீர் கழிப்பார்கள் ? இப்போது அவர்கள் திறந்த வெளிக்கு செல்வார்கள். அது சரியா ? கழிப்பறை வளாகத்திற்கும் கோவிலிற்கும் இடையில் ஒரு வடிகால் உள்ளது ” எனத் தெரிவித்தாக இடம்பெற்று இருக்கிறது.

சஹரன்பூர் பகுதியில் கோவில் அருகே உள்ள பேருந்து நிலையப் பகுதியில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பொதுக் கழிப்பிட வளாகத்தை உடைத்த 8 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என சஹரன்பூர் போலீசார் தெரிவித்து உள்ளனர். கழிப்பிடத்தை இடிக்கும் போது ஜெய்ஸ்ரீராம் கோசத்தை எழுப்பியதாகவும் செய்திகளில் இடம்பெற்று உள்ளது.

முடிவு :

நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் பகுதியில் கோவில் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட பொதுக் கழிப்பிட வளாகத்தை வலதுசாரி அமைப்பினர் இடிக்கும் போது எடுக்கப்பட்டதே வைரலாகும் வீடியோ. அங்கு கழிப்பிடத்தை இடிக்கும் போது ஜெய்ஸ்ரீராம் என முழங்கி உள்ளனர்.

ஆனால், தாழ்த்தப்பட்ட பெண்கள் கழிப்பறையை உபயோகிக்கக்கூடாது எனக் கூறி கழிப்பிடத்தை உடைத்ததாகப் பரவும் தகவல் தவறானது. கழிப்பறையை உடைத்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader