டென்மார்க் நாட்டில் முஸ்லீம் மக்களின் ஓட்டுரிமை ரத்து செய்யப்பட்டதா ?

பரவிய செய்தி

டென்மார்க் நாடு முஸ்லீம்கள் ஓட்டு போடும் உரிமையை ரத்து செய்தது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

டென்மார்க் நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு வாக்கு செலுத்தும் உரிமையை அந்நாட்டு அரசாங்கம் ரத்து செய்து உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ? 

டென்மார்க் நாட்டில் இஸ்லாமிய மக்களுக்கு வாக்கு செலுத்தும் உரிமை ரத்து செய்யப்பட்டு உள்ளதா எனத் தேடுகையில், அவ்வாறான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி, இப்படி பரவும் தகவல் கடந்த 2020ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவி வருவதை பார்க்க முடிந்தது.

டென்மார்க் நாடாளுமன்றத்தின் இணையதளத்தின்படி, ” டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளில் நிரந்தரமாக வசிக்கும் மற்றும் டென்மார்க்கில் 18 வயது நிறைவடைந்து வாக்களிக்கும் வயதுடைய டென்மார்க் குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு ” எனக் கூறப்பட்டு இருக்கிறது. மதத்தின் அடிப்படையில் வாக்கு உரிமை வழங்கப்படுவதாக எங்கும் இடம்பெறவில்லை.

2019ம் ஆண்டு வெளியான டென்மார்க் நாடாளுமன்ற தேர்தல் சட்ட விதிகளின் ஆவணத்திலும், தகுதி வாய்ந்த டென்மார்க் குடிமக்கள் வாக்கு செலுத்தலாம் என்றே உள்ளது. மதம் சார்ந்த ஓட்டுரிமை குறித்து இடம்பெறவில்லை.

2019ம் ஆண்டு அக்டோபரில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுடன் இணைந்து பணியாற்ற வெளிநாடுகளுக்கு சென்ற டென்மார்க்கை சேர்ந்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் வகையில் சட்டம் இயற்றியதாக அல்ஜசீரா உள்ளிட்ட செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து, டென்மார்க் நாட்டில் இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தும் உரிமை பறிக்கப்பட்டதாக வதந்திகள் பரவத் தொடங்கி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், டென்மார்க் நாட்டில் முஸ்லீம்கள் ஓட்டு போடும் உரிமை ரத்து செய்யபட்டதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. அவ்வாறு எந்தவொரு அறிவிப்பும் டென்மார்க் அரசால் வெளியிடப்படவில்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader