This article is from Feb 05, 2020

டெட்டால் கிருமிநாசினி நோவல் கொரோனா வைரசை கொல்லுமா ?| கேள்வி சரியானதா ?

பரவிய செய்தி

இப்போது புரியுதா கார்ப்பரேட்காரன் வியாபார யுக்தி. 27/10/2019-ல் தயாரித்த டெட்டால் கம்பெனி காரனுக்கு கொரோனா வைரஸ் பற்றி எப்படி தெரியும். மக்களே உஷார்.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து பரவத் தொடங்கி பலரின் உயிரைப் பறித்து வருகிறது. அதற்கான மருந்தினை கண்டறியும் முயற்சியில் பல நாடுகள் முயன்று வருகையில் தடுப்பு மருந்து எனக் கூறி பல்வேறு வதந்திகள், தவறான செய்திகள் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவி உள்ளன.

இதற்கிடையில் தஞ்சாவூர் மீம்ஸ் எனும் முகநூல் பக்கத்தில், ” இப்போது புரியுதா கார்ப்பரேட்காரன் வியாபார யுக்தி. 27/10/2019-ல் தயாரித்த டெட்டால் கம்பெனி காரனுக்கு கொரோனா வைரஸ் பற்றி எப்படி தெரியும். மக்களே உஷார் ” என்ற வாசகத்துடன் டெட்டால் கிருமிநாசினி பாட்டிலின் பின்பக்கத்தில் ” Cold virus (Human coronavirus and RSV) ” உள்ளிட்டவையை கொல்லும் என இடம்பெற்று இருப்பதை குறிப்பிட்டு காண்பித்து உள்ளனர்.

2019 டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய புதியவகை கொரோனா வைரஸ் 2020 ஜனவரி முதல்தான் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றது. ஆகையால், அதற்கு முன்பாகவே தயாரித்த டெட்டால் மருந்து கொரோனா வைரஸை எப்படி கொல்லும் எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

உண்மை என்ன ? 

கொரோனா வைரஸ்(CoV) என்பது ஒரு வைரஸ் குடும்பத்தின் பெயர். தற்போது பரவிய வைரஸின் பெயர் நோவல் கொரோனா வைரஸ் (2019 nCoV) எனக் குறிப்பிட்டு உள்ளனர். புதியவகை கொரோனா வைரஸை பொதுவாக கொரோனா வைரஸ் என அழைப்பதால் பலரும் தவறாக புரிந்து கொன்டுள்ளனர்.

இதற்கு முன்பாக 2002-ல் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் கொரோனா வைரஸ் (SARS-CoV ) சீனாவில் பரவி பலரின் உயிரைப் பறித்தது. அதேபோல், MERS-CoV எனும் வைரசும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் படிக்க : சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது அமெரிக்க சதியா ?

டெட்டால் கிருமிநாசினி வுஹானில் பரவிய கொரோனா வைரசை (2019 nCoV) கொல்லும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். டெட்டால் கிருமிநாசினி கொரோனா வைரஸை (2019 nCoV) கொல்வதாக உலக அளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதன் விளைவால் டெட்டால் தயாரிப்பான ஆர்.பி அதனை மறுத்து விளக்கம் அளித்து உள்ளது.

” இந்த வைரஸ் புதிதாக பரவி வருவதால், மற்ற அனைத்து உற்பத்தியாளர்களை போலவே ஆர்.பி-க்கு 2019 nCoV தொடர்பான சோதனைக்கு அணுக முடியவில்லை. இதன் விளைவாக புதிய வைரஸிற்கு எதிரான செயல்திறன் அளவை உறுதிப்படுத்தும் நிலையில் இன்னும் இல்லை ” என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும், டெட்டால் நிறுவனத்தின் இணையதளத்தில் அளிக்கப்பட்ட 2019 nCoV குறித்து விரிவான விளக்கத்தில், புதியவகை கொரோனா வைரஸ்(2019 nCoV) தொடர்பாக தங்களின் தயாரிப்புடன் சோதனை செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டப்பட்டு உள்ளது.

2016-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டெட்டால் பாட்டிலின் பின்பக்கத்தில் ” Cold virus (Human coronavirus and RSV) ” என இடம்பெற்று உள்ளதை படத்தில் காணலாம்.

2019 ஆண்டில் தயாரிக்கப்பட்ட டெட்டால் மருந்தின் பின்பக்கத்தில் கொரோனா வைரஸ் என பொதுவாக குறிப்பிட்ட காரணத்தினால் புதிய வைரசுடன் தவறாக தொடர்புபடுத்தி மீம்ஸ் பதிவை வைரல் செய்து உள்ளனர். இதனை கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைத்து தவறாக புரிந்து கொண்டு உள்ளனர். புதியவகை வைரஸை டெட்டால் தயாரிப்பு கொல்லாது என அந்நிறுவனமே மறுப்பு தெரிவித்து உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader