முன்னாள் சபாநாயகர் தனபாலை இருக்கையில் அமர வைக்காத பழனிச்சாமி எனப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
இன்று காலையில் தனபால் அவர்களை இருக்கையில் கூட அமர வைக்காத பம்மாத்து பழனிசாமி!
மதிப்பீடு
விளக்கம்
மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 20 அன்று அதிமுகவின் மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முதன்மையான உறுப்பினர்கள் முன்னிலையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 05) ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு உட்கார இருக்கை கூட தராமல் பழனிச்சாமி நிற்க வைத்ததாகக் கூறி திமுக மாணவர் அணியின் தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பலரும் சமூக வலைதளங்களில் அந்த கூட்டத்தில் அவர் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
இன்று காலையில் தனபால் அவர்களை இருக்கையில் கூட அமர வைக்காத பாதம் தாங்கி பழனிசாமி! pic.twitter.com/eEbOiLSK5j
— Rajasekar Kurichi (@rajasekarkurich) July 5, 2023
#அம்மாவால் சபாநாயகராக்கபட்ட#தனபால் அவர்களை இதைவிட அவமானத்த படுத்த முடியாது!!!தீய சக்தி பழனிசாமி விரைவில் அழிந்துவிடுவார்!!!கழகம் காக்கபடும் 👇👇 pic.twitter.com/BadMslklst
— Theni Jayamani போடி கிழக்கு ஒன்றிய கழகம் (@JAYAMAN91912004) July 5, 2023
உண்மை என்ன ?
அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படங்கள் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கமான AIADMK IT WING ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஜூலை 05) வெளியிட்டு இருந்தனர்.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்கள்,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள்,மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டிற்கான, “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” லோகோவினை வெளியிட்டார்.1(2) pic.twitter.com/okcE3Wc8Yt
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) July 5, 2023
அதில், “மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டிற்கான, “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” லோகோவினை வெளியிட்டார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில், தமிழ்நாடு அரசின் 19 வது சபாநாயகரான தனபால் அவர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முதல் வரிசை இருக்கையில் அமர்ந்திருப்பதை காண முடிந்தது.
ஆனால் பரவி வரும் புகைப்படத்தில் அவர் கூட்டத்தின் இறுதி வரிசையில் நிற்பது போல உள்ளதால் இது குறித்து மேலும் தேடியதில், நேற்றைய நிகழ்ச்சியின் வீடியோவை NewsJ சேனல் தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேற்று (ஜூலை 05) வெளியிட்டிருந்தது.
அந்த வீடியோவின் 13:18 வது நிமிடத்தில் பரவி வரும் புகைப்படத்தில் உள்ள காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் தனபால் உள்ளே நுழைவதையும், அவர் வருவதை கவனித்த பழனிச்சாமி, அவர் அமர்வதற்கு முதல் வரிசையில் இருக்கை தயார்ப்படுத்தி தருமாறு சொல்வதையும் காண முடிந்தது. இதனையடுத்து தனபால் அவர்கள் முதல் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்ததை அந்த வீடியோ காட்டுகிறது.
எனவே அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உள்ளே நடந்து வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, அவர் நிற்பதாகக் கூறி தவறாகப் பரப்பியுள்ளனர்.
மேலும் படிக்க: எம்.பி திருமாவளவனுக்கு இருக்கை அளிக்காமல் ஓரமாக நிற்க வைத்ததாக வதந்தி பரப்பும் தினமலர் & பாஜகவினர் !
இதற்கு முன்பும் அரசியல் தலைவர்களை இருக்கையில் அமர வைப்பது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவின. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் பிளாஸ்டிக் இருக்கையில் அமர வைத்ததாகப் பரப்பப்படும் பொய் !
முடிவு :
நம் தேடலில், முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை இருக்கையில் அமர வைக்காத எடப்பாடி பழனிச்சாமி எனப் பரப்பப்படும் தகவல்கள் உண்மைஅல்ல. நேற்றைய அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.