M.S தோனி பெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக போராடினாரா ?

பரவிய செய்தி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி நாட்டில் தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலையை கண்டித்து நடைபெற்ற பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பெட்ரோல் பங்க் ஒன்றில் அமர்ந்து போராடி உள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
விளம்பர ஷூட்டிங் ஒன்றிக்காக சிம்லா சென்ற எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி பெட்ரோல் பங்க் ஒன்றில் அமர்ந்து இருந்த போது எடுக்கப்பட்ட படங்களே இவை.
விளக்கம்
தினந்தோறும் உயரும் பெட்ரோல் விலையால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. தொடர்ச்சியாக உயரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து நாடு முழுவதிலும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை கையில் எடுத்தனர்.
பெட்ரோல், டீசல் உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதில், பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி பெட்ரோல் பங்க் ஒன்றில் அமர்ந்து போராடியுள்ளார் என்று படங்களுடன் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது.
எம்.எஸ்.தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி ஆகிய இருவரும் பெட்ரோல் பங்கில் அமர்ந்து அங்குள்ளவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் படங்களை பயன்படுத்தி கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது. அதில் ஓர் பதிவை காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் Priyanka Chaturvedi மறுட்விட் செய்து இருந்தார்.
தோனி புகைப்படத்தின் பின்னணி :
பெட்ரோல் உயர்விற்காக பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து எம்.எஸ்.தோனி மற்றும் அவரின் மனைவி எந்தவொரு பெட்ரோல் பங்கிற்கும் செல்லவில்லை.
” இணையத்தில் வைரலாகும் தோனியின் புகைப்படங்கள் ஹிமாசலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பம்ப் இடத்தில் எடுக்கப்பட்டது. தோனி உடன் இருப்பது நடிகை பங்கஜ் கபூர், சிகை வல்லுநர் சப்னா பவானி. அனைவரும் ஆகஸ்ட் மாதம் சிம்லாவிற்கு விளம்பர பட ஷூட்டிங்காக சென்றுள்ளனர் ”
ஆகஸ்ட் 29-ம் தேதி சப்னா பவானி ட்விட்டரில் தோனி, சாக்ஷி மற்றும் நண்பர்களுடன் இரவு நேர ஷூட்டிங்கில் இருப்பதாக வலைத்தளத்தில் பரவும் படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும், தோனி உடனான படங்களை பற்றி தற்போது சப்னா பவானி உறுதிப்படுத்தியுள்ளார்.
மாஸ்டர் கார்டு விளம்பரப் படத்தில் தோனி மற்றும் நடிகை பங்கஜ் கபூர் ஆகியோர் நடித்து உள்ளனர். ஆக, வைரலாகும் தோனியின் படங்கள் ஆகஸ்ட் 29-ம் தேதி எடுக்கப்பட்டதே தவிர செப்டம்பர் 10-ம் தேதி எடுக்கப்பட்டவை அல்ல..
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.