This article is from Jun 27, 2019

மாநகராட்சி பள்ளிக்கு ” துரோணா பாடசாலை ” என பெயர் மாற்றியதால் சர்ச்சை !

பரவிய செய்தி

மாநகராட்சி பள்ளிக்கு துரோணா பாடசாலை என பெயர் மாற்றியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு. அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் ராயபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ராயபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 236 மாணவர்கள் உடன் அப்பள்ளி இயங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், ராயபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த காரணத்தினால், பள்ளியை புனரமைத்து தருவதற்கு கொடையாளர்களை பள்ளி கல்வி அதிகாரிகள் தேடி வந்தனர். அந்நேரத்தில், ரோட்டரி திருப்பூர் பிரைம் என்ற அமைப்பு அதனை ஏற்க முன்வந்தது.

ரோட்டரி திருப்பூர் பிரைம் எனும் என்.ஜி.ஓ அமைப்பு, 10 ஆண்டுகளுக்கு பள்ளியை கவனித்து கொள்வதற்கு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்பந்தம்(MoU) செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து, பள்ளியின் பழைய வகுப்பறைகளை இடித்து விட்டு புதிதாக 6 வகுப்பறைகளை கட்டியுள்ளனர்.

புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கு ” துரோணா பாடசாலை ” என பெயரிட்டுள்ளனர். ஜூன் 21-ம் தேதி புதிதாக கட்டப்பட்ட பள்ளியை திறந்து வைக்க பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வருகைத் தந்தார்.

இது குறித்து என்.ஜி.ஓ தலைவர் வி.மணிகண்டன் கூறுகையில், ” அரசு பள்ளி மாணவர்கள் நல்ல வகுப்பறைகள் மற்றும் பிற தேவையான வசதியை பெறுவதில் உதவ எங்களது அமைப்பு தயாராக உள்ளது. பள்ளியின் முதன்மை கட்டிடத்தை ரூ.75 லட்சம் செலவில் கட்டியுள்ளோம். லெப் உள்ளிட்ட பிற வசதிகளையும் ஏற்படுத்தி தர திட்டமிட்டு உள்ளோம்”.

” மத்திய அரசின் மூலம் துரோணாச்சாரியார் விருதுகள் கூட வழங்கப்படுகிறது. எனவே, எங்களில் ஒருவர் அப்பெயரை பரிந்துரை செய்தார்.மாணவர்களுக்கு உதவி செய்வதை காட்டிலும் வேறு உள்நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆனால், இந்த அளவிற்கு சர்ச்சையாகும் என நினைக்கவில்லை ” என கூறி இருந்தார்.

ஆனால், 80 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பள்ளியின் பெயரை மாற்றியதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் எந்த அரசு பள்ளிக்கு கொடையாளர்கள் நிதி வழங்கியதற்காக பெயர் மாற்றப்படவில்லை. ஆகையால், பள்ளியின் பெயரை முன்பு இருந்தபடியே மாற்றக்கோரி மனுவை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வழங்கி உள்ளனர்.

மனு வழங்கியவர்களில் ஒருவர் இது குறித்து கூறுகையில், ” பள்ளியின் மாற்றத்திற்கு உதவி செய்த கொடையாளர்கள் தங்களின் பெயர்களை ப்ளெக்ஸ் உள்ளிட்டவையில் அவர்களின் முயற்சிக்காக அச்சிடுவது இயல்பான ஒன்று. ஆனால், இங்கு பள்ளியின் பெயரே மாறி உள்ளது. இது தவறான முன்னுதாரணமாகும் ” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், அரசு பள்ளிக்கு துரோணா பாடசாலை என பெயர் மாற்றியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுகின்றன. சர்ச்சையின் எதிரொலியாக தற்பொழுது ” துரோணா பாடசாலை ” என மாற்றப்பட்ட பெயர் நீக்கப்பட்டு உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader