This article is from Sep 06, 2019

நீண்டநேரம் டைப்பர் அணிந்த குழந்தை புற்றுநோயால் மரணமா ? | உண்மை என்ன ?

பரவிய செய்தி

நீண்ட நேரம் டைப்பர் அணிவித்த தாயின் அலட்சியத்தால் புற்றுநோய் தொற்று ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பரிதாப பலி.

மதிப்பீடு

விளக்கம்

நவீன வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளுக்கே டைப்பர் அணியும் பழக்கத்திற்கு அனைவரும் மாறி வருகின்றனர். வெளி இடங்களுக்கு குழந்தைகளை தூக்கிச் செல்லும் பொழுது, இரவில் தூங்கும் பொழுது குழந்தைகளுக்கு டைப்பர் அணிவிப்பது வழக்கத்தில் இருக்கிறது. அதிகபட்சமாக காலை முதல் மாலை வரை அல்லது இரவு நேரம் முழுவதும் பயன்படுத்துவர்.

இந்நிலையில், குழந்தைகளுக்கு அணிவிக்கும் டைப்பரை அதிக நேரம் பயன்படுத்தியதால் புற்றுநோய் தொற்று ஏற்பட்டு பச்சிளம் குழந்தை இறந்து விட்டதாக செய்தி சேனலின் நியூஸ் கார்டு ஒன்றுடன் மீம் பதிவு வைரலாகி வருகிறது.

குழந்தைகள் குறித்த செய்தி என்பதால் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஆகையால், செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

நியூஸ் கார்டு :

நியூஸ் 7 செய்தி சேனலின் நியூஸ் கார்டு உடன் பரவும் செய்தியில் ” நீண்ட நேரம் டைப்பர் அணிவித்த தாயின் அலட்சியத்தால் புற்றுநோய் தோற்று ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பரிதாப பலி ” எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில், தொற்றுக்கு பதிலாக ” தோற்று ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனினும், நியூஸ் 7 செய்தி நிறுவனத்தில், டைப்பர் அணிவித்த காரணத்தினால் புற்றுநோய் பாதித்து குழந்தை இறந்ததாக கூறும் செய்தி வெளியாகி இருக்கிறதா எனத் தேடி பார்க்கையில், அவ்வாறான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இதில் இருந்து போலியான போட்டோஷாப் நியூஸ் கார்டு மூலம் செய்தியை பரப்பி உள்ளனர் என்பது நிரூபணமாகி உள்ளது.

டைப்பரால் குழந்தை இறந்து உள்ளதா ?

எனினும், டைப்பரை நீண்ட நேரம் அணிவித்த காரணத்தினால் குழந்தை இறந்து உள்ள சம்பவம் உலகில் எங்காவது நிகழ்ந்து உள்ளதா என்பது குறித்தும் தேடினோம். அப்போழுது, 2017 நிகழ்ந்த பரிதாப சம்பவத்தை காண நேரிட்டது.

அதிகபட்சமாக குழந்தைகளுக்கு டைப்பரை(நப்பீஸ்) மணி கணக்கில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நாட்கள் கணக்கில் ஒரே டைப்பரை பயன்படுத்திய காரணத்தினால் 4 மாதக்குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

2017 ஆகஸ்ட் 30-ம் தேதி அமெரிக்காவின் லோவா மாநிலத்தில் Sterling Koehn எனும் 4 மாத ஆண் குழந்தைக்கு புழு தொற்று பாதித்த ஒரே டைப்பரை 9 முதல் 14 நாட்கள்(தோராயமாக) பயன்படுத்திய காரணத்தினால் குழந்தைக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு குழந்தை இறந்து உள்ளது.

Sterling Koehn குழந்தை இறப்பின் காரணமாக புகார் அளிக்கப்பட்டு வழக்கும் நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் Cheyanne Renae Harris மற்றும் தந்தை Zachary Paul Koehn ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உள்ளது.

முடிவு :

நம்முடைய தேடலில், நீண்ட நேரம் டைப்பர் அணிவித்த காரணத்தினால் குழந்தை புற்றுநோய் பாதித்து இறந்ததாக செய்தியில் வெளியானதாக பரவும் நியூஸ் கார்டு போலியான ஒன்று. சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தில் அவ்வாறான செய்திகள் வெளியாகவில்லை. புற்றுநோய் பாதித்து இறந்ததாக செய்திகள் இல்லை.

நீண்ட நாட்களாக ஒரே டைப்பரை பயன்படுத்திய காரணத்தினால் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் குழந்தை இறந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இருப்பினும், நீண்ட நேரத்தினால் அல்ல நீண்ட நாட்களாக ஒரே டைப்பரை பயன்படுத்திய காரணத்தினால் இறப்பு நிகழ்ந்து உள்ளது.

அவசர காலங்களுக்கு குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டைப்பரை மருத்துவர்களின் ஆலோசனைகள் உடன் பயன்படுத்துவது நல்லது. மேலும், நீண்ட நேரங்களுக்கு பயன்படுத்துவதை குறைந்து கொள்ள வேண்டும்.

சுகாதாரம் சார்ந்த செய்திகளை பகிர்வதற்கு முன்பு போலியான செய்திகளா என அறிந்து பகிரச் செய்யுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader