காவிரி கூக்குரலுக்கான ஆதரவை டிகாப்ரியோ திரும்ப பெற்றாரா ?

பரவிய செய்தி
ஈஷா யோகா மையம் பழங்குடியினருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதாகவும், மரம் நடுவோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாகவும் Cauvery Calling Campaign-க்கான தனது ஆதரவை திரும்பப் பெற்றார் லியனார்டோ டிகாப்ரியோ.
மதிப்பீடு
விளக்கம்
ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் காவிரிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக ” காவிரி கூக்குரல் இயக்கம் ” என்ற பிரச்சாரத்தை துவங்கினார். கர்நாடகா முதல் தமிழகம் வரை காவிரி கூக்குரல் பிரச்சாரத்திற்காக பைக் ரைடு மேற்கொண்டது அனைவரும் நன்கு அறிந்தது. காவிரி பகுதிகளின் விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட காவிரி கூக்குரல் சார்பாக இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதன்படி, ஒரு மரத்திற்கு 42 ரூபாய் வீதம் பெறப்பட்டு வருகிறது
இந்நிலையில், ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல் இயக்கத்திற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் சார்ந்து பேசி வரும் லியனார்டோ டிகாப்ரியோ காவிரி கூக்குரல் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியது.
ஆனால் தற்பொழுது, ” ஈஷா யோகா மையம் பழங்குடியினருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதாகவும், மரம் நடுவோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாகவும் Cauvery Calling Campaign-க்கான தனது ஆதரவை லியனார்டோ டிகாப்ரியோ திரும்ப பெற்றதாக ” ஜெயா ப்ளஸ் நிறுவனத்தின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் கேட்டுக் கொண்டனர்.
செய்தி ?
லியனார்டோ டிகாப்ரியோ தனது ஆதரவை திரும்ப பெற்றதாக கூறும் ஜெயா ப்ளஸ் உடைய செய்தி குறித்து அறிய அந்த செய்தி நிறுவனத்தின் முகநூல் பக்கத்திற்கு சென்று பார்க்கையில் நியூஸ் கார்டு செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், தற்பொழுது அந்த செய்தி நீக்கப்பட்டு உள்ளது. செய்தி உண்மையா என்பது குறித்தும் ஆராய்ந்து பார்த்தோம்.
” இந்தியாவின் ஆறுகள் அவற்றின் சிறு நதிகள் மறைந்து வருவதால் கடுமையான ஆபத்தில் உள்ளன. காவிரி நதியை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளை உடன் சேரவும் ” என்ற கருத்து உடன் மேலும் தகவலுக்கு ஈஷாஅவுட்ரேஞ்ச் காவிரி கால்லிங் உடைய இணையதள லிங்கையும் அளித்து செப்டம்பர் 21-ம் தேதி தன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் டிகாப்ரியோ பதிவிட்டு இருந்தார்.
டிகாப்ரியோ உடைய முகநூல் கருத்தை ஈஷாவும் விளம்பரத்திற்காக பயன்படுத்தி கொண்டு உள்ளது. எனினும், டிகாப்ரியோ உடைய முகநூல் பதிவின் கம்மெண்ட்களில் ” ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா அறக்கட்டளை ” குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.
டிகாப்ரியோ ஆதரவை திரும்ப பெற வேண்டும் !
இந்தியாவின் சுற்றுச்சூழல் நீதிக்கான கூட்டணி(ECG), தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிவில் சமூக மக்கள் மற்றும் தனிநபர்கள் என பலரும் ஒருங்கிணைந்து ஈஷா அறக்கட்டளை தொடங்கிய காவிரி கூக்குரல் பிரச்சாரத்திற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுமாறு ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆதரவு குழுவின் ஒருங்கிணைப்பாளர் Leo F Saldanha கையெழுத்திட்ட கடிதம் டிகாப்ரியோ காவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான செய்திகளே செப்டம்பர் 25-ம் தேதி முதல் வெளியாகி இருக்கிறது.
எனினும், டிகாப்ரியோ காவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றதாக செய்திகள் இல்லை. மேலும், அவரின் அதிகாரப்பூர்வ முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவுகள் ஏதும் வெளியிடவில்லை.
யானைகளின் வழித்தடத்தை மறைத்து முறையான அனுமதி இல்லாமல் ஈஷா யோகா மையத்தின் கட்டிடங்களை நிறுவியதாகவும், விளம்பரத்திற்காகவும், அரசியலுக்காகவும் காவிரி நதி என்ற பெயரில் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக ஜக்கி மீது குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இதற்கும், சுற்றுச்சூழல் ஆதரவு குழு டிகாப்ரியோவிற்கு அனுப்பிய கடிதம் தொடர்பாகவும் ஈஷா மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது.
முடிவு :
நமக்கு கிடைத்த தகவலின் படி, ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை நடிகர் டிகாப்ரியோ திரும்ப பெற்றதாக செய்திகள் இல்லை. அந்த செய்தியை வெளியிட்ட ஜெயா ப்ளஸ் செய்தியை நீக்கியுள்ளது.
எனினும், காவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுமாறு கூறி டிகாப்ரியோவிற்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் ஆதரவு குழு கடிதம் அனுப்பியுள்ளது.