தினமலரை நடுநிலை பத்திரிக்கை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய பொய் செய்தி !

பரவிய செய்தி
மாணவர்களின் பசியை அறிந்து காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் செயல்படுத்தினார், நடுநிலை பத்திரிகை என நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியை வெளியிட்டிருக்கின்றனர் நடுநிலை என்று சொன்னாலும், அவர்கள் தலையில் இருக்கும் கொண்டையை காட்டிவிட்டார்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
மதிப்பீடு
விளக்கம்
ஆகஸ்ட் 31ம் தேதி தினமலர் நாளிதழின் முகப்பு பக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடர்பாக அருவருப்பான தலைப்பில் செய்தி வெளியானதால் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.
மேலும் படிக்க : காலை உணவு திட்டம் : அருவருப்பு தலைப்பால் எழுந்த கண்டனங்கள்.. தினமலருக்கு பதில் இதோ !
இதையடுத்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தினமலரை நடுநிலை பத்திரிக்கை என நினைத்துக் கொண்டிருந்தோம் எனக் கூறியதாக நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதை திமுகவைச் சேர்ந்தவர்களே பகிர்ந்து விமர்சித்து வந்தனர்.
ரங்கராஜ் பாண்டே வாட்சப் குரூப்ல இருந்தா இப்டிதான் நடக்கும் 🤧 pic.twitter.com/5oofdjcKJG
— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) August 31, 2023
நடுநிலை பத்திரிக்கை என்று நம்பிட்டு இருந்தாராம்…😂😂😂… அட்லீஸ்ட் இது மாதிரி பேட்டியாவது குடுக்காம இருங்கயா மானம் போகுது…🤦 pic.twitter.com/NMnd7vG2HH
— 🔥 DESPOTER 🔥 (@despoters_12345) August 31, 2023
உண்மை என்ன ?
எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பவா செல்லத்துரை எழுதிய “சொல் வழி பயணம்” நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில்(15:30 நிமிடம்), ” பல நேரங்களில் நாங்கள் நடுநிலை பத்திரிக்கை, நடுநிலை பத்திரிக்கை(நியூட்ரல்) என்று சொல்லும் பத்திரிக்கை முதல் பக்கத்தில் மிகவும் மனவேதனைக்கு உண்டான செய்தியை சொல்லி இருக்காங்க. என்னதான் நியூட்ரல் பத்திரிக்கைனு சொன்னாலும், வடிவேலு சொன்ன மாறி தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துட்டீங்க ” என்றே பேசி இருக்கிறார்.
இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், ” மாணவர்களின் பசியை அறிந்து காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் செயல்படுத்தினார், நடுநிலை பத்திரிகை என கூறிக் கொள்ளும் பத்திரிகையின் முதல் பக்கத்தில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியை வெளியிட்டிருக்கின்றனர் நடுநிலை என்று சொன்னாலும், அவர்கள் தலையில் இருக்கும் கொண்டையை காட்டிவிட்டார்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு ” என்ற நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.
#JUSTIN “தலையில் இருக்கும் கொண்டையை காட்டிவிட்டார்கள்”#anbilmaheshpoyyamozhi #CMBreakfastScheme #News18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/OTaoBS7Gur
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 31, 2023
மேற்காணும் நியூஸ் கார்டு நேற்று (ஆகஸ்ட் 31) இரவு 10 மணிக்கே வெளியாகி இருக்கிறது. ஆனால், அமைச்சர் அன்பில் மகேஷ், தினமலரை நடுநிலை பத்திரிக்கை என நினைத்துக் கொண்டிருந்தோம் எனக் கூறியதாக உள்ள நியூஸ் கார்டு இரவு 8 மணியளவில் இருந்தே சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் முதலில் தவறான செய்தியை வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கின்றனர்.
முடிவு :
நம் தேடலில், அமைச்சர் அன்பில் மகேஷ், தினமலரை நடுநிலை பத்திரிக்கை என நினைத்துக் கொண்டிருந்தோம் எனக் கூறியதாக பரவிய செய்தி தவறானது. அவர் நடுநிலை பத்திரிக்கை என கூறிக் கொள்ளும் பத்திரிக்கை என்றே கூறி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.