மலேசியாவில் பட்டிமன்றத்திற்கு லியோனி மதுபோதையில் சென்றதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
“குடிபோதையில் கூட்டத்திற்கு வந்த லியோனி” மலேசியாவில் நடக்கவிருந்த பட்டிமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த தி.மு.க. நிர்வாகியும் தமிழ்நாடு பாடநூல்கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி குடிபோதையில் கூட்டத்திற்கு வந்ததால் மலேசிய தமிழர்களால் விரட்டியடிப்பு இது உங்கள் கட்சிகூட்டமல்ல என மலேசிய தமிழர்கள் காட்டம்
மதிப்பீடு
விளக்கம்
பட்டிமன்ற நகைச்சுவைப் பேச்சாளரான திண்டுகல் ஐ லியோனி கடந்த 2021 ஜூலை 07 அன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் (தலைவராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டார். மேலும் இவர் திமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மலேசிய பட்டிமன்ற கூட்டத்திற்கு குடிபோதையில் வந்ததால் விரட்டியடிக்கப்பட்டதாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
https://twitter.com/Ramvaanavil/status/1654085842783342592
உண்மை என்ன ?
பரப்பப்படும் நியூஸ் கார்டு தொடர்பாக நியூஸ் 7 தமிழ் சேனலின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கங்களில் ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா என்று தேடுகையில், அப்படி எந்த செய்தியும் மே 03ம் தேதி அன்றும், அதை தவிர்த்த மற்ற தேதிகளிலும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
இது தொடர்பாக பரவும் நியூஸ் கார்டினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த 2022 மே 17 அன்று லியோனி தொடர்பாக நியூஸ் 7 தமிழ் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.
“பொய்யான வீடியோக்கள் பரப்பப்படுகிறது” – திண்டுக்கல் ஐ.லியோனிhttps://t.co/WciCN2AH8n | #TNgovt | #GovernmentSchools | #News7TamilUpdates pic.twitter.com/Ohxfz3gbeD
— News7 Tamil (@news7tamil) May 17, 2022
அதில் “அரசு பள்ளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது; ஆனால் பள்ளி மாணவ, மாணவிகள் சண்டை என்று திட்டமிட்டு பொய்யான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன – திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நியூஸ் கார்டில் அவரின் அதே புகைப்படத்துடன் சிலர் தவறான செய்திகளை எடிட் செய்து தற்போது பகிர்ந்து வந்துள்ளதை அறிய முடிந்தது.
மேலும் நியூஸ் 7 தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை” என்றும் தன்னுடைய செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மலேசியாவில் என்ன நடந்தது ?
மேலும் இது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், விகடன் தன்னுடைய வலைப்பக்கத்தில் லியோனி மலேசியா சென்றது தொடர்பாக மே 4 அன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த கட்டுரையில் “மலேசிய நாட்டின் சில நகரங்களில் ஏப்ரல் கடைசி வாரம் தொடங்கி மே முதல் தேதி வரை தொடர்ந்து லியோனியின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனாவால் சில ஆண்டுகள் அவருடைய நிகழ்ச்சிகள் அங்கே நடக்காததால் இந்த முறை டிக்கெட்டுகள் அனைத்தும் சில நாட்களுக்கு முன்னதாகவே முழுமையாக விற்கப்பட்டுவிட்டது.
அங்கு நடக்கவிருந்த நான்கு நாள் நிகழ்ச்சிகளில், மூன்று நாள் திட்டமிட்ட படி நிகழ்ச்சிகள் நடந்தது, நான்காவது நாள் பினாங்கில் நடந்த நிகழ்ச்சியில்தான் சில பிரச்சனைகள் ஏற்பட்டது” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மேலும் அதில் “லியோனி நிகழ்ச்சிக்கு வர மூன்று மணி நேரத்திற்கும் மேல் தாமதமானதால், பார்வையாளர்களில் சிலர் எங்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி தரவேண்டும் எனக் கூறி வாக்குவாதம் செய்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் லியோனி வந்த பின்னர் மீதமிருக்கும் பார்வையாளர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வீடியோக்கள் தமிழ்நாடு வரை பரவவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மழையின் காரணமாகவும், போக்குவரத்து நெரிசலின் காரணமாகவும் லியோனி நிகழ்ச்சிக்கு காலதாமதமாக வந்ததால் தான் அங்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என விளக்கம் அளித்து உள்ளனர்.
மேலும் படிக்க: செருப்பை தலையில் தூக்கி… லியோனியின் முழுமையான பேச்சு !
மேலும் படிக்க: பாடநூல்களில் தமிழ் அறிஞர்களின் சாதி பெயர்கள் 2019-லேயே நீக்கப்பட்டுள்ளது !
இதற்கு முன்பாக லியோனி தொடர்பான செய்திகள் குறித்தும் நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், மலேசியா சென்ற தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி குடிபோதையில் கூட்டத்திற்கு வந்ததால் விரட்டியடிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.