திண்டுக்கல் அருகே உள்ள குளத்தை தூர்வாரிய 200 காவலர்கள் !

பரவிய செய்தி
திண்டுக்கல் அருகே 200 காவலர்கள் ஒன்று சேர்ந்து 4,913 ஹெக்டர் பரப்பளவு கொண்ட குளத்தை தூர்வாரியுள்ளார்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
திண்டுக்கல் காவல்துறையினர் குளத்தை தூர்வாரிய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்து உள்ளது. ஆனால், 4,913 ஹெக்டர் அல்ல, 0.1 ஹெக்டர் பரப்பளவு. விரிவாக படிக்கவும்.
விளக்கம்
தமிழகம் முழுவதும் ஏராளமான ஏரி, குளம், குட்டைகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதை தடுக்க முடியவில்லை. மாநிலத்தில் இருக்கும் நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரித்து வந்தாலே மக்களின் தண்ணீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்து விடலாம்.
தன்னார்வ அமைப்புகள், இளைஞர்கள் குழு என பலரும் ஒன்றிணைந்து தங்களின் ஊர்களில் இருக்கும் பராமரிப்பு இல்லாத குளங்களை தூர்வாரி பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவர். அதில், காவலர்கள் குழுவும் இணைந்து இருக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிப்படி ஆரோக்கியசாமி நகரில் அமைந்து இருக்கும் பாலகுருவப்பா நாய்க்கர் குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 210 காவலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
0.1 ஹெக்டர் பரப்பளவு கொண்ட குளத்தை தூர்வாரும் பணியானது திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சக்திவேல் தலைமையில் நடைபெற்று உள்ளதாக செப்டம்பர் 21-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.
” நீர்நிலைகளை பராமரித்தல், மேம்படுத்துதல் மற்றும் சுத்தப்படுத்தல் போன்றவை மழைநீரை முறையாக சேகரிக்க நிச்சயம் பயன்படும் சிறந்த வழிகளாகும். தமிழ்நாடு அரசின் குடிமரமாத்து திட்டத்தின் கீழ் புத்துணர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் நீர்நிலை மாறியுள்ளதாக ” திண்டுக்கல் எஸ்பி தெரிவித்து இருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தை 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டது பாராட்டக்கூடிய செயல். அத்தகைய பணியில் 4,913 ஹெக்டர் பரப்பளவு கொண்ட குளம் என தவறாக குறிப்பிட்டு விட்டனர். 0.1 ஹெக்டர் பரப்பளவு சரியான தகவல்.
இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி அருகே உள்ள சின்னகலை முத்தூர் எனும் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளதாக செப்டம்பர் 22-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
நீர்நிலைகளை அனைவரும் ஒன்றிணைந்து பராமரித்து வந்தால் மழைக்காலங்களில் நீர்நிலைகள் நிரப்பி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் !
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.