திரையரங்கில் குதிரைக்கு இருக்கை, காடுவெட்டி குருவிற்கு இருக்கை கேட்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டுகள் !

பரவிய செய்தி
எனது திரைப்படம் வெளியாகும் எல்லா திரையரங்குகளிலும் காடுவெட்டியாருக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்படும். -திரைப்பட இயக்குனர் மோகன் ஜி.
ராமர், சீதை, லட்சுமணர், அனுமர், பரதன், வாலி, சுக்ரிவன், அணில், குதிரை ஆகிய அனைவருக்கும் மொத்தம் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும். – இந்து மக்கள் கட்சி
மதிப்பீடு
விளக்கம்
புராணக் கதையான இராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து இயக்குநர் ஓம் ராவத் ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரபாஸ், சைப் அலி, கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்த இத்திரைப்படம் 5 மொழிகளில் ஜூன் மாதம் 16ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தைக் காண அனுமன் வருவார். எனவே அனைத்து திரையரங்குகளிலும் ஒரு இருக்கையை அனுமனுக்காக காலியாக வைத்திருங்கள் என அப்படத்தின் இயக்குநர் பேசியிருந்தார்.
என்ன இப்படி கிளம்பிட்டானுங்க.😁 pic.twitter.com/BjMYpo91lc
— Galadriel Devar (@Devar_Army) June 8, 2023
இதனைத் தொடர்ந்து அனுமாருக்கு மட்டும் இருக்கை ஒதுக்குவதை ஏற்க முடியாது. ராமர், சீதை, லட்சுமணர், அனுமர், பரதன், வாலி, சுக்ரிவன், அணில், குதிரை ஆகிய அனைவருக்கும் மொத்தம் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்து மக்கள் கட்சியினர் திரையரங்கின் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தும் எனக் கூறியதாகக் கதிர் நியூஸ் கார்டு ஒன்று திராவிட ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
இதே போன்று, திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தனது திரைப்படத்தின்போதும் காடுவெட்டி குருவுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்படும் எனக் கூறியதாக சாணக்யா நியூஸ் கார்டு ஒன்றும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கூறியதாக பரவும் சாணக்யா நியூஸ் கார்டில், ‘08-06-2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டு பற்றி அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அந்த தேதியில் எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் பதிவிடவில்லை.
மோகன் ஜி அவருடைய சமூக வலைத்தள பக்கத்திலும் அப்படி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இவற்றிலிருந்து இது போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்பதை அறிய முடிகிறது.
அடுத்ததாக, இந்து மக்கள் கட்சி குறித்து கதிர் நியூஸ் வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்து கதிர் பேஸ்புக் பக்கத்தில் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் பதிவிடவில்லை. பரவக் கூடிய நியூஸ் கார்டு போலியானது என அவர்களது பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்து மக்கள் கட்சி மற்றும் அர்ஜுன் சம்பத்தின் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், அத்தகைய எந்த பதிவுகளோ, அறிக்கைகளோ அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. இதுவும் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : ஒடிசா இரயில் விபத்து : எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !
இதேபோல் பரவிய பல்வேறு போலி நியூஸ் கார்டுகள் குறித்தும் யூடர்ன் கட்டுரைகள் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : செங்கோல் ஒப்படைத்த பிறகு விபத்து, மரணங்கள் நிகழ்வது பேரழிவைக் குறிக்கிறது என ஆதீனம் கூறினாரா ?
முடிவு :
நம் தேடலில், காடுவெட்டி குருவிற்குத் திரையரங்கில் இருக்கை ஒதுக்கப்படும் என இயக்குநர் மோகன் ஜி கூறியதாகவும், ராமர், சீதை, குதிரை என 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கூறியதாகவும் பரவும் நியூஸ் கார்டுகள் உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.