This article is from Aug 18, 2019

படகில் உள்ள பால் கேன்களில் ஆற்றின் நீரை கலக்கும் மனிதர் | இந்தியாவில் நிகழ்ந்ததா ?

பரவிய செய்தி

பால் உற்பத்தியை எப்படி பெருக்கல் பண்ராங்க பாருங்க…

மதிப்பீடு

விளக்கம்

வெள்ளை நிறத்தில் பால் போன்று இருக்கும் திரவம் நிரப்பப்பட்ட கேன்களை படகில் வைத்து பயணிக்கும் நபர் ஒருவர் ஆற்றில் தேங்கி இருக்கும் நீரை எடுத்து கேன்களில் ஊற்றும் காட்சிகள் முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழில் ” பால் உற்பத்திய எப்படி பெருக்கல் பண்ராங்க பாருங்க ” என்ற வார்த்தைகளுடன் அவ்வீடியோ சமீபத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு முன்பாவே இந்திய அளவில் பிற மொழிகளில் இதே வீடியோ வைரலாகி இருக்கிறது. அவ்வாறு வைரலாகிய பதிவுகளில், ” வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்லும் பாலில் அசுத்த நீரை கலக்கிறார் ” என இடம்பெற்றது.

உண்மை என்ன ?

படகில் கொண்டு செல்லும் பாலில் அசுத்தமான நீரை கலப்பதாக கூறப்படும் சம்பவம் எங்கு நிகழ்ந்து, வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க முயன்றோம். வீடியோவில் படகு செல்லும் பகுதி காடுகளுக்கு இடையே ஓடும் நதியை போன்று காட்சியளிக்கிறது.

படகில் இருக்கும் நபரின் தொப்பியில் ” duque Presidente ” என இடம்பெற்று இருந்தது. அந்த வார்த்தைகளை பயன்படுத்தி தேடிய பொழுது கொலம்பியா நாட்டின் அதிபர் ” Iván Duque Márquez ” உடைய விவரத்தை அளித்தது.

அடுத்ததாக, படகில் இருக்கும் கேன்களுக்கு முன்னால் இருக்கும் ஒரு கேனில் ” Tronador D ” என்ற வார்த்தைகளை காண முடிந்தது. அதனையும் கொலம்பியா நாட்டையும் இணைத்து தேடிய பொழுது ” Tronador D ” என்பது களைச் கொல்லி மருந்து என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இந்த களைக் கொல்லி மருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை.

மேலும், கொலம்பியா செய்தி இணையதளம் ஒன்றில் 2019 மே 8-ம் தேதி வெளியான செய்தியில் ஆற்றில் இருக்கும் நீரை பாலில் கலப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், எந்த பகுதியில், எப்பொழுது நடந்தது என்பது குறித்த தகவல் குறிப்பிடப்படவில்லை. இதே வீடியோ பல நாடுகளில் சமூக வலைதளங்களில், இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.


முடிவு :

களைக் கொல்லி மருந்து கேன் இருக்கும் படகில் இருப்பது பால் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் மருந்தா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. எந்த நாட்டின், எந்த பகுதியைச் சேர்ந்தது என்றும் உறுதியாக விவரங்கள் இல்லை. பல நாடுகளில் மே 2019-ல் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

ஆகஸ்ட் 2019-ல் இந்தியாவில் பாலில் அசுத்தமான நீரை கலப்பதாக இந்த வீடியோ வைரலாகத் துவங்கியுள்ளது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வைரலாகும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்பதை உறுதியாக கூற முடியும். அந்த களைக் கொல்லி மருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை.

Updated : 

Facebook link | archived link  

சில மாதங்களுக்கு முன்பு படகில் உள்ள கேன்களில் நீரை கலக்கும் வைரல் வீடியோ, தற்பொழுது (டிசம்பர்2019) மீண்டும் வைரல் செய்யப்படுகிறது. அது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை. தவறான வீடியோக்களை பகிர வேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader