பேருந்தில் பெண்கள் போல் வேடமிட்டு ஆட்கடத்தலில் ஈடுபடும் இளைஞர்கள் எனப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
பேருந்தில் பெண்கள் வேடமணிந்து ஆட்கடத்தல் நடைபெறுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பெண் போன்று வேடமிட்டுள்ள ஒருவன் தன்னுடைய முக கவசத்தை கழட்டுவது போன்றும், பின்னர் அவன் மீசை மற்றும் தாடியுடன் இருப்பதை பேருந்தின் நடத்துனர் வீடியோ எடுப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் போல் வேடமிட்டு அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடக் கொடுப்பார்கள் சாப்பிட்டவர் மயக்கமுற்றவுடன் அவர்கள் தங்கள் ஆட்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்சை வரவழித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் நடிப்பார்கள் இதுதான் அவர்களின் திட்டம். pic.twitter.com/b8fFJDOzt8
— anantham (@ananthamharshi) August 19, 2023
பெண்கள் வேடமிட்டு அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடக் கொடுப்பார்கள். மயக்கமடைந்தவுடன், அவர்கள் தங்கள் ஆட்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸை அழைத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவர்களின் திட்டம். pic.twitter.com/YreNkdtd1g
— Dr.வினோத் கண்ணா இராமலிங்கம் (@VinothK7766) August 16, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ குறித்து Amar Ujala என்ற ஊடகம் கடந்த 2022 மார்ச் 23 அன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது.
அதில், “டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பணத்தை சிறிது மிச்சப்படுத்த, ஒரு இளைஞன் இப்படிச் செய்துள்ளான். டெல்லி பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞன் பெண்களைப் போல தலையை மூடிக்கொண்டான். முகக்கவசமும் அணிந்துள்ளான். நடத்துனர், முகமூடியை கழற்றுமாறு கூறியுள்ளார். முகக்கவசத்தை அகற்றுவதற்கு பதிலாக, அந்த இளைஞன் பெண்ணைப் போல பேச ஆரம்பித்துள்ளான்.
ஆனால் நடத்துனர் நம்பவில்லை. இதனையடுத்து இளைஞனை கண்டக்டர் கண்டித்து முககவசத்தை கழற்றச் சொன்னார். அப்படியும் செய்யாததால் போலீசுக்கு போன் செய்து பேசியுள்ளார். இதைக் கண்ட இளைஞன் முகமூடியை கழற்றினான். பின்னர் அவனது மீசை மற்றும் தாடி தென்பட்டது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று “Khabar Tehkikat” என்ற யூடியூப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டெல்லியில் பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம் என்பதால், பஸ் கட்டணத்தை சேமிக்க, அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெண் வேடமிட்டு மீசை மற்றும் தாடியுடன் இருக்கும் அந்த நபர் நடத்துனரிடம் சிக்கினார்.” என்று வீடியோவில் செய்தி நிருபர் ஒருவர் கூறுவதைக் கேட்க முடிகிறது.
கடந்த 2019 அக்டோபரில் இருந்து கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவையை வழங்கி வருகிறது. அந்த சேவையை பயன்படுத்திக் கொள்வதற்காகவே இந்த இளைஞன் இப்படி மாறுவேடத்தில் சென்றுள்ளான் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: கர்நாடகாவில் இலவச பேருந்தில் பயணிக்க ஜன்னல் வழியாக ஏற முயன்று கையை இழந்த பெண் என பாஜகவினர் பரப்பும் பொய் !
மேலும் படிக்க: டெல்லி அரசு போக்குவரத்தில் பெண்களுக்கு இலவச பயணம் – கேஜ்ரிவால் அறிவிப்பு.
முடிவு:
நம் தேடலில், பேருந்தில் பெண்கள் வேடத்தில் சென்று பெண்களை கடத்துவதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை. இது டெல்லியில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவையை பயன்படுத்துவதற்காகவே அந்த இளைஞன் அவ்வாறு மாறுவேடத்தில் சென்ற போது பிடிபட்ட வீடியோ என்பது உறுதியாகிறது.