40 மாவட்டங்களுக்கு மேல் சென்றால் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுமா ?

பரவிய செய்தி
ஒரு மாநிலத்தில் 40 மாவட்டங்களுக்கு மேல் இருந்தால் அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட 38வது மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார். அவரின் ஆட்சியில் சமீபத்தில் தொடர்ந்து தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உதயமாகி வருவதை காண முடிகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு 38-வது மாவட்டமாக புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை இன்று (28.12.2020) காணொலிக்காட்சி மூலமாக துவக்கி வைத்தேன். pic.twitter.com/DbAn2i6de1
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 28, 2020
இந்நிலையில், ஒரு மாநிலத்தில் 40 மாவட்டங்களுக்கு மேல் சென்றால் அந்த மாநிலமே இரண்டாக பிரிக்கப்படும் என்றும், மாவட்டங்களை பிரிப்பது நல்லதா கெட்டதா என இடம்பெற்ற மீம் ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் சுற்றி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இந்தியாவில் முதன் முதலாக மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர், பிற காரணங்களுக்காக புதிய மாநிலங்கள் உருவாகின. ஆனால், ஒரு மாநிலத்தில் 40 மாவட்டங்களுக்கு மேல் இருந்தால் அந்த மாநிலமே இரண்டாகப் பிரிக்கப்படும் எனக் கூறுவது உண்மையில்லை.
ஏனெனில், இந்தியாவில் அதிக மாவட்டங்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் 75 மாவட்டங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவதாக மத்தியப் பிரதேச மாநிலம் 52 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
இந்திய மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை குறித்து 2019-ம் ஆண்டு வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் இத்தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அரசாங்க இணையதளத்தின் அடிப்படையில் இவ்விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு மற்றும் பீகார் உள்ளன. தற்போது உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்த்து தமிழகம் 38 மாவட்டங்களை கொண்டுள்ளது. அதேபோல், பீகார் மாநிலமும் 38 மாவட்டங்களை கொண்டுள்ளது.
75 மாவட்டங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற வாதம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. 2011-ம் ஆண்டில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியின் போது உத்தரப் பிரதேசத்தை 4 பகுதியாக பிரிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சிறந்த நிர்வாகம் மற்றும் பிராந்தியத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை அளிக்கவே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தை சிறு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்பதே காரணமாக அமைந்தது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. 2020 ஜூலையில் பிஎஸ்பி கட்சியின் எம்.பி குன்வர் டேனிஷ் அலி என்பவர் மீண்டும் அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தற்போதுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தை சிறு சிறு மாநிலங்களாக பிரிக்கப்படுவதில் கோரிக்கைகள் எழுந்தாலும், அவ்வாறு நடக்காமல் இருக்க அரசியல் காரணங்கள் இருந்து வருகின்றன.
மக்கள் தொகை, நிர்வாகம் உள்ளிட்டவையை கணக்கில் கொண்டே புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. ஆனால், 40 மாவட்டங்களுக்கு மேல் சென்றால் மாநிலமே இரண்டாக பிரிக்கப்படும் எனக் கூறும் தகவல் முற்றிலும் தவறானது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.