கி.வீரமணியை பல்லக்கில் சுமப்பதாக தவறாகப் பரவும் புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தருமபுரம் ஆதீனத்தை சீடர்கள் மற்றும் பக்தர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லும் நடைமுறைக்கு தமிழக அரசு தடை விதித்தது தற்போதுவரை பல்வேறு கண்டனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வதை எதிர்த்த திராவிடக் கழக தலைவர் வீரமணியை மட்டும் பல்லக்கில் சுமக்கலாமா என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
மே மாதம் இறுதியல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுர ஆதீனத்தின் சார்பில் நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த திராவிட கழகத்தினர், அதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு கோட்டாச்சியர் தடை விதித்து இருந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்களில் பல்லக்கில் தூக்கிச் செல்லும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த திராவிட கழகத்தினர் போராட்டத்தை நடத்தி உள்ளனர். இம்முறை தமிழக அரசு தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வில் பல்லக்கில் செல்ல தடை விதித்தது.
இந்நிலையில், திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பல்லக்கில் செல்வதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இப்புகைப்படத்தில் கி.வீரமணி பல்லக்கில் அல்ல, குதிரை சாரட் வண்டியில் செல்கிறார்.
இப்புகைப்படம் 2018-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் திராவிட மாணவர்களின் அணிவகுப்பின் போது குதிரை வண்டியில் கி.வீரமணியை அழைத்து சென்ற போது எடுக்கப்பட்டது.
தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வில் மனிதர்களை வைத்து பல்லக்கில் தூக்கிச் செல்வதற்கு பதிலாக சப்பரத்திலோ அல்லது மோட்டார் பொருத்திய வாகனத்திலோ அழைத்து செல்லலாம் என திராவிட கழகத்தினர் உட்பட பலரும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் படிக்க : போப்பை பல்லக்கில் தூக்கிச் செல்வதாக வைரலாகும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் !
தருமபுர ஆதீனத்தின் பல்லக்கு விவகாரத்தில், கிறிஸ்தவ மதத்தில் போப் ஆண்டவரை பல்லக்கில் சுமந்து செல்வதாக 1978-களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு தவறாக பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை பல்லக்கில் சுமந்து செல்வதாக பரவும் புகைப்படம் தவறானது. அது பல்லக்கு அல்ல, குதிரை வண்டி என அறிய முடிகிறது.