கர்நாடகா பாடப் புத்தகங்களில் சாவர்க்கர் பாடம் கிழிக்கப்படும் எனப் பரவும் டி.கே.சிவகுமாரின் பழைய வீடியோ..!

பரவிய செய்தி
கர்நாடகாவில் பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும்.. இன்னும் பதவியே ஏற்கவில்லை அதற்குள் சரவெடி..
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் பதவியேற்பதற்கு முன்பே கர்நாடக பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும் என்று கூறி கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் (KPCC) தலைவரான டி.கே.சிவக்குமார் மேடையில் பாடப் புத்தகத்தைக் கிழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
https://twitter.com/PhoenixJaiSeela/status/1658662866071998464
கர்நாடகாவில் பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும் சிவக்குமார்…
பதவியே இன்னும் ஏற்கவில்லை அதற்க்குள் சரவெடி👍💥💥 @arivalayam pic.twitter.com/d38Xxi0JxG
— P.D.ஹரிபிரசாத் (@Haripra33339999) May 16, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 2022 ஜூன் 18 அன்று எகனாமிக் டைம்ஸ் செய்தியில் இந்த வீடியோ குறித்த செய்தி வெளியிட்டுள்ளது. அதில் திருத்தப்பட்ட கர்நாடக பாட புத்தகங்களை திரும்ப பெற வேண்டும் எனக் கூறி கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரான டி கே சிவக்குமார் கர்நாடக பாட புத்தகங்களை கிழிப்பதாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திகளை தேடியதில், டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம், அவர் போராட்டம் அறிவிப்பதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியது தொடர்பான செய்தியானது 2022 ஜூன் 08 அன்று வெளியிட்டுள்ளது. அதில் “ரோஹித் சக்ரதீர்த்தா கமிட்டியால் திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களை அரசு திரும்பப் பெற வேண்டும். அது வரை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நிறுத்தாது. குவெம்பு, பகத் சிங் மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்ட பிரபலங்களைப் பற்றிய தவறான தகவல்களைக் கொண்ட இந்த திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படத் தகுதியானவை” என்று கூறியுள்ளார்.
இது குறித்து டைம்ஸ் நவ் 2022 ஜூன் 18 அன்று வெளியிட்டுள்ள செய்திகளையும் கீழேக் காணலாம்.
இதற்கு முன்பும் இதே போன்று திருத்தப்பட்ட 8-ஆம் வகுப்பு கன்னடம்-2 பாட புத்தகத்தில் ‘கலவண்ணு கெட்டவரு’ (காலத்தை எதிர்த்து வென்றவர்கள்) என்ற தலைப்பு கொண்ட அத்தியாயத்தில் ஒரு பத்தியில் “சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு புல்புல் பறவைகள் செல்வது வழக்கம், சாவர்க்கர் அந்த பறவைகளின் சிறகுகளில் அமர்ந்து பறந்து தாய்நாட்டிற்கு தினமும் செல்வார்” என்று உள்ளது. சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லாத நிலையில், இதற்கு எதிராக கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக பாட புத்தக சங்கம் (KTBS) பல விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
இதன் மூலம் திருத்தப்பட்ட கர்நாடக பாட புத்தகங்களுக்கு எதிராக டி.கே.சிவக்குமார் பாட புத்தகங்களை கிழிக்கும் நிகழ்வில் சவார்க்கர் குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதையும், 2022-இல் நடந்த நிகழ்வை, தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின் நடந்தது போன்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
ஆதாரம்