This article is from Dec 14, 2018

அண்ணா அறிவாலயத்தில் நாட்டிலேயே உயரமான கொடி கம்பமா?

பரவிய செய்தி

கழகத் தலைவர் ஸ்டாலின் நாட்டிலேயே மிக உயரமாக அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 114 அடி உயர கொடி கம்பத்தில் கழக இரு வண்ணக் கொடியை ஏற்றினார் – திமுக ட்விட்டர் பக்கம்.

மதிப்பீடு

சுருக்கம்

அண்ணா அறிவாலயத்தில் ஏற்றப்பட்டது 114 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய அரசியல் கட்சி கொடி கம்பம் எனலாம். நாட்டிலேயே மிகப்பெரிய கொடி கம்பம் என கூறுவது தவறு. இந்தியாவில் உள்ள உயரமான தேசியக் கொடி கம்பம் 360.89 அடியாகும்.

விளக்கம்

டிசம்பர் 11-ம் தேதியன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சிவப்பு வண்ணக் கொடியை  114 அடி உயர மின் கம்பத்தில் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

திமுக சார்பில் நிறுவப்பட்ட கட்சிக் கொடி கம்பம் 114 அடி, 2430 கிலோ எடை கொண்டது. இதில் பறக்கும் கொடியின் அகலம் 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்டது. கொடி இரவு நேரத்திலும் தெரியக்கூடிய வகையில் இரண்டு ஹைபீம் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரம்மாண்டமான கட்சிக் கொடி ஏற்றிய நிகழ்வை பற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக கொடி கம்பம் நாட்டிலேயே உயரமான கொடி கம்பம் என பொருள் தரும்படி பொருந்தாத செய்தியை அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்தது தவறான ஒன்று.

இந்தியாவில் மிக அதிக உயரத்தில் பறக்கும் கொடியானது நம் நாட்டின் தேசியக் கொடி மட்டுமே. இந்தியாவில் அதிக உயரத்தில் பறக்கும் கொடியான தேசியக் கொடி கர்நாடகா மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பெலகாவி கோட்டை அருகே கோட்டே கேரேவில் மார்ச் 2018-ல் ஏற்றப்பட்டது. இதன் உயரம் 110 மீட்டர் (360.89அடி). இதற்கு அடுத்தப்படியாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரியில் 360 அடி உயரத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது.

திமுக கட்சி பற்றி வெளியான ஊடகச் செய்திகள் சிலவற்றில் நாட்டிலேயே மிகப்பெரிய கட்சிக் கொடி எனக் குறிப்பிட்டு வெளியிட்டு உள்ளனர். அதேபோல், டிசம்பர் 12-ம் தேதி திமுக சார்பில் வெளியிட்ட அறிக்கை என ஹிந்து பத்திரிகையில் வெளியான செய்தியில் “ தமிழகத்தில் எந்தவொரு கட்சி அலுவலகத்திலும் இல்லாத 114 அடி உயரம் கொண்ட கொடி “ எனக் கூறியதாக இடம்பெற்று உள்ளது.

நாட்டில் அல்லது தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சி கொடி என வேண்டுமானால் திமுக கட்சிக் கொடியைக் கூறலாம்.

அறிக்கையைத் தவிர்த்து தமிழகத்தின் எதிர்க் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தவறான பொருள்படி கூறியது ஏற்புடையது அல்ல. இவ்வாறான பொருந்தாத தகவல் திமுக கட்சியின் ஆதரவாளர்களால் உண்மை என நினைத்து அதே தவறான செய்தி பரவலுக்கும் வழிவகை செய்யக்கூடும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader