1976ல் ஆட்சிக் கலைக்கப்பட்ட பிறகே திமுக எமர்ஜென்சியை எதிர்த்ததாக மாரிதாஸ் சொன்ன பொய் !

பரவிய செய்தி
1975-ல் எமர்ஜென்சி வந்ததும் திமுக எதிர்க்கவில்லை. 1976-ல் அவர்களது ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு தான் எதிர்க்க தொடங்கினர். – மாரிதாஸ்
மதிப்பீடு
விளக்கம்
மாரிதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் 1975ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி தொடர்பாக ஒரு நிமிட வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், “எமர்ஜென்சியை இந்திரா காந்தி அறிவித்த நாள் 25.06.1975. அன்றைய தினம் இரவே நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். திமுகவில் இருந்து யாரும் கைது செய்யப்படவே இல்லை.
எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது 6வது மாதம். அதற்கடுத்து இரண்டு மாதத்தில் 20.08.1975-ல் மு.க.ஸ்டாலினுக்கு கல்யாணம் செய்கிறார்கள். இந்த கல்யாணத்தை முன்னின்று யார் நடத்தினார்கள் எனில் பக்ருதீன் அலி அகமது. எமர்ஜென்சியை அறிவிக்க கையெழுத்து போட்டவரே அவர்தான்.
ஏன் திமிங்கலம் (MKStalin) அது எப்படி? pic.twitter.com/7YaUQ0iKA2
— Maridhas (@MaridhasAnswers) June 16, 2023
எப்போ எதிர்த்தார்கள்? 1976 பிப்ரவரியில் தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தியே ஆக வேண்டும். 5 வருடம் ஜனவரியோட முடிகிறது. எமர்ஜென்சி இருப்பதினால் பல மாநிலங்களில் தேர்தல் நடத்தவில்லை. பல மாநிலங்களில் நீட்டிக்கிறார்கள். பல மாநிலங்களில் கலைத்து விடுகிறார்கள். கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை உள்ளே கொண்டுவந்து விடுகிறார்கள். அப்படி கொண்டு வரப்பட்ட மூன்று முக்கிய மாநிலங்கள் தமிழ்நாடு, குஜராத், மேகாலயா.
தங்களது ஆட்சியை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக 1975, ஜனவரி 31ம் தேதி வரைக்கும் திமுக இந்திரா காந்திக்கு முட்டு கொடுத்து கொண்டுதான் இருந்தார்கள். ஆட்சியை கலைத்ததும் நான் இந்திரா காந்தியை எதிர்க்க போகிறேன் என கிளம்பிவிட்டார். 15 நாட்களுக்கு முன்னர் இந்திரா காந்தியை எதிர்க்க போகிறேன் என ஆட்டம் போட்டுவிட்டு, இன்னவரைக்கும் நான்தான் மிசா போராளி, மிசா போராளி சொல்லிக்கிட்டு. கருணாநிதி வகையறா இங்கு செய்யக்கூடிய மிசா போராட்டம் இருக்குல… அது பச்ச பொய்” என பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
எமர்ஜென்சியை திமுக ஆரம்பத்தில் எதிர்க்கவில்லை, 1976 ஜனவரி 31ம் தேதி திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகுதான் எதிர்க்க தொடங்கினர் என மாரிதாஸ் பேசியுள்ளது குறித்த தகவல்களை தேடினோம்.
கலைஞர் கருணாநிதி தனது வாழ்க்கை பயணம் குறித்து நெஞ்சுக்கு நீதி என்ற தொடரினை எழுதியுள்ளார். ஆறு பாகங்களாக வெளிவந்துள்ள அதன் முதல் பகுதியை ‘தினமணி கதிர்’ இதழிலும், இரண்டாம் பாகத்தை ‘குங்குமம்’ இதழிலும் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் 1975, ஜூன் 25ம் தேதி நள்ளிரவு அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளான ஜூன் 26ம் தேதி காலை வானொலியில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது பற்றி இந்திரா காந்தி உரையாற்றியது, அதனைத் தொடர்ந்து ஜூன் 27ம் தேதி திமுக செயற்குழு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது பற்றி “இந்தியாவிலேயே முதல் தீர்மானம்” என்ற தலைப்பில் கலைஞர் எழுதியுள்ளார். இது நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில் வெளிவந்துள்ளது.

அத்தீர்மானத்தின் முதல் பத்தியிலேயே, “உலகத்தின் மிகப்புகழ் வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியத் திருநாட்டில் அண்மைக் காலமாக ஆளுங் காங்கிரசார் கடைப்பிடிக்கும் போக்கும் பிரதமர் இந்திரா காந்தியார் அவர்கள் நடைமுறைப்படுத்தும் காரியங்களும் ஜனநாயக ஒளியை அறவே அழித்து நாட்டை சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்து வருவது கண்டு, தி.மு. கழகச் செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது” என்றுள்ளது.

மேலும், “சதி நடத்துவோர், வன்முறையில் ஈடுபடுவோர், தகாத முறையில் பேசுவோர். எழுதுவோர் தண்டிக்கப்பட ஏற்கனவே எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போது, நாட்டைச் சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வருவது தேவை தானா? ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் எனக் கூறி, சர்வாதிகாரக் கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றது தானா?” என வேறொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமர்ஜென்சி என்பது சர்வாதிகார போக்கு என திமுகவின் செயற்குழு கூட்டத்தில் 1975, ஜூன் மாதம் 27ம் தேதியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து வேறு ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளதா என்பது குறித்தும் தேடினோம்.
1975, ஜூலை 15 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையில் எமர்ஜென்சி காலத்தில் செய்யப்பட்ட பத்திரிகை தணிக்கை குறித்து ‘டியர் மிஸ்டர் வாசகரே’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. பத்திரிகை தணிக்கை விதிகளுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இலக்கியம், சரித்திரம், விஞ்ஞானம் போன்றவை பற்றிய கட்டுரைகள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அரசியல் தொடர்பான கட்டுரைகளுக்குத் தணிக்கை அவசியம் செய்ய வேண்டும்.
அதன்படி திமுக செயற்குழு தீர்மானங்களையும், ஸ்தாபன காங்கிரஸ் செயற்குழு தீர்மானங்களையும் தணிக்கைக்கு அனுப்பியதில் பிழைத்த பகுதிகளை துக்ளக்கில் வெளியிட்டுள்ளோம் என சோ அந்த கட்டுரையில் கூறியுள்ளார்.
அப்படி வெளியிடப்பட்ட செய்தியில் “திராவிடர் முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 27.06.1975 அன்று சென்னையில் கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்குக் கீழே அடைப்புக் குறிக்குள் (Parentheses) “இதைப் பிரசுரிக்கலாம் என்று தணிக்கை அதிகாரியின் உத்தரவு இருக்கிறது என்று சொல்ல உரிமை இருக்கிறதே தவிர, இதற்குப் பின் உள்ளவற்றைப் பிரசுரிக்கக் கூடாது என்று தடுத்தார்களா இல்லையா என்று கூறும் உரிமை இல்லை” என்றுள்ளது.
அதாவது, திமுக தீர்மானத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை வெளியிடத் தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எமர்ஜென்சி குறித்து திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உண்மை என்பதை சோ-வின் எழுத்துக்கள் மூலம் உறுதி செய்ய முடிகிறது.
மேலும் ஸ்டாலினுக்கு அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது முன்னிலையில் திருமணம் நடந்ததாக மாரிதாஸ் கூறுகிறார். அவர் காண்பிக்கும் போஸ்டரிலேயே ‘கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில், நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் முன்னிலையில்’ என்றுள்ளது. ‘குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது மற்றும் அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்குவர்’ என்றுதான் உள்ளது.
அதுமட்டுமின்றி ஸ்டாலினின் திருமண விழாவில் பக்ருதீன் அலி கலந்து கொள்ளவே இல்லை. அவர் வாழ்த்து செய்தி மட்டுமே அனுப்பியுள்ளார். இது தொடர்பான செய்தியும் வெளியாகியுள்ளது. பக்ருதீன் முன்னிலையில் ஸ்டாலின் திருமணம் நடைபெற்றதாக மாரிதாஸ் சொன்னதும் பொய்.
இவற்றிலிருந்து எமர்ஜென்சி அறிவித்த போது இந்திரா காந்தியை திமுக எதிர்க்கவில்லை என மாரிதாஸ் சொன்னது பொய் என்பதை அறிய முடிகிறது. மேலும், எமர்ஜென்சி அறிவித்த அடுத்த நாளே திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், எமர்ஜென்சி அறிவித்ததும் திமுக இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தது என்றும், திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகே அவர்கள் எமர்ஜென்சியை எதிர்த்தார்கள் என மாரிதாஸ் பேசியது உண்மை அல்ல. 1975, ஜூன் 27ம் தேதியே எமர்ஜென்சி ஒரு சர்வாதிகார பேரிருள் என திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.