This article is from May 14, 2022

மே 18 முதல் உயரும் பேருந்து கட்டண விவரங்கள் எனப் பரவும் செய்தி உண்மையா ?

பரவிய செய்தி

மே 18-ம் தேதி முதல் ஏறுகிறது பேருந்து கட்டணம். புறநகர் சாதாரண பேருந்து (10 கி.மீ) ரூ5-ல் இருந்து ரூ.6 , புறநகர் இடைநில்லாப் பேருந்து (30 கி.மீ) : ரூ18-ல் இருந்து ரூ.27 , நவீன சொகுசுப் பேருந்து (30 கி.மீ) : ரூ.24-ல் இருந்து ரூ.33 , விரைவுப் பேருந்து((30 கி.மீ) ; ரூ.17-ல் இருந்து ரூ24 , குளிர்சாதனப் பேருந்து(30 கி.மீ) : ரூ.27-ல் இருந்து ரூ.42 , வால்வோ பேருந்து (30 கி.மீ) : ரூ33-ல் இருந்து ரூ.51 .

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சேலத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ” நிதி ஆதாரத்தை திரட்ட தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லாததால் விரைவில் பேருந்துக் கட்டணம் உயரும், மின்கட்டணமும் உயர்த்தப்படும் ” எனக் கூறி இருந்தார்.

இதற்கு நகராட்சி வளர்ச்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ” பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவை உயரப்போவதாக அவர்கள் சொன்னால், அது நடக்கும்போதுதான் பார்க்க வேண்டும். சூழ்நிலைக்கேற்ப என்னென்ன முடிவுகள் எடுக்க வேண்டுமோ அதை மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் முதலமைச்சர் எடுப்பார் ” எனத் தெரிவித்து இருந்தார்.

அமைச்சர் கே.என்.நேரு பேச்சால் விரைவில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் எனும் பேச்சு உருவாகி விட்டது. இந்நிலையில், திமுக தலைமையிலான தமிழக அரசு பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி விட்டதாகவும், மே 18-ம் தேதி முதல் அமலுக்கு வரும் பேருந்து புதிய கட்டணங்களின் விவரங்கள் என இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?

தமிழக அரசு பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி விட்டதாக அரசு தரப்பிலோ, ஊடகத்தின் தரப்பிலோ செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. பரவும் செய்திகளில் மோட்டார் விகடன் நியூஸ் கார்டு இடம்பெற்று இருக்கிறது. அதுகுறித்து தேடிய போது, சமீபத்தில் மோட்டார் விகடன் அப்படியொரு செய்தியை வெளியிடவில்லை.

எனவே, வைரலாகும் கட்டண விவரங்களை வைத்து தேடிய போது, அது 2018-ல் அதிமுக ஆட்சியில் அரசால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண விவரங்கள் தொடர்பாக புதியதலைமுறை வெளியிட்ட செய்தி என அறிய முடிந்தது.

2018-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளின் உயர்த்தப்படும் கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து வெளியான பழைய செய்திகளை எடுத்து 2022 மே மாதம் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் எனத் தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், மே 18-ம் தேதி முதல் கட்டணம் ஏறுகிறது, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் எனப் பரப்பப்படும் தகவல் வதந்தியே. அந்த கட்டண விவரங்கள் கடந்த 2018-ல் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader