ஈரோட்டில் விசிக நிர்வாகியிடம் மனைவியைப் பறிகொடுத்த திமுக கிளைச் செயலாளர் எனப் பரவும் போலிச் செய்தி

பரவிய செய்தி
ஈரோடு அருகே வாக்கு எந்திரத்தை பாதுகாக்க சென்று! விசிக நிர்வாகியிடம் மனைவியை பறிகொடுத்த திமுக கிளை செயலாளர்! 2வயது குழந்தையுடன் தவிக்கும் கணவர்!
மதிப்பீடு
விளக்கம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில், ஈரோடு அருகே வாக்குப் பதிவு எந்திரத்தை பாதுகாக்க சென்ற போது விசிக நிர்வாகியிடம் திமுக கிளை செயலாளர் ஒருவர் மனைவியை பறிகொடுத்ததாக பாலிமர் செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
பாலிமர் செய்தியின் பெயரில் பரவும் இந்த ஸ்க்ரீன்ஷார்ட்டை 2021 முதலே சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிந்தது.
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திக் குறித்து பாலிமர் செய்தியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், அவ்வாறு எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
ஆகையால், பரப்பப்படும் செய்தியில் உள்ள கணவன், மனைவி, குழந்தையின் புகைப்படத்தை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 மே 18ம் தேதி ” காதல் கணவர், குழந்தையை கொன்று புதைத்த பெண் கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம் ” எனும் தலைப்பில் தினத்தந்தியில் வெளியான செய்தியில் அவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது.
செய்தியில், ” வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா மந்தைவெளி சந்து தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது28) எலக்ட்ரீசியன், அவரது மனைவி தீபிகா இருவரும் காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு வயதில் பிரவீன் என்ற மகன் இருக்கான். இந்நிலையில், கடந்த 13ம் தேதி முதல் கணவர் மற்றும் குழந்தையைக் காணவில்லை என்று ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் தீபிகா புகார் கொடுத்தார். இதையடுத்து, போலீசாரின் சந்தேகத்தின் பேரில் தீபிகாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராஜா குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார். இதனால் விரக்தி அடைந்த நான் கடந்த 12ம் தேதி இரவு கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரவீன் ஆகியோரை தலையில் கல்லை கொண்டு தாக்கினேன். பின்னர் இருவரின் பிணத்தையும் வீட்டின் அருகே சிறிய அளவில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டேன் என வாக்குமூலம் அளித்ததாக ” வெளியாகி இருக்கிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாலிமர் செய்தி வெளியிட்டு உள்ளதா எனத் தேடுகையில், 2019 மே 17ம் தேதி பாலிமர் சேனலில் அப்பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகி இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில், 2019 மே 19ம் தேதி வெளியான பாலிமர் சேனல் செய்தியில், ” கணவரின் நண்பன் ஜெயராஜ் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் திட்டமிட்டு கணவர் மற்றும் குழந்தையை தீபிகா கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், தீபிகா சிறையில் உள்ளதாகவும் ” கூறியுள்ளனர்.
2019ல் கணவன் மற்றும் குழந்தையைக் கொன்ற சம்பவத்தில் வெளியான செய்தியில் இருந்து கொலையானவர்கள் மற்றும் கொலை செய்ததாக கைதான பெண்ணின் புகைப்படங்களை பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்பி வந்துள்ளனர்.
மேலும் படிக்க : டி-ஷர்ட்டில் காதல் வசனம்: விசிக லோகோ, திருமாவளவன் படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பப்படும் புகைப்படம் !
முடிவு :
நம் தேடலில், ஈரோடு அருகே வாக்கு எந்திரத்தை பாதுகாக்க சென்ற போது விசிக நிர்வாகியிடம் மனைவியை பறிகொடுத்த திமுக கிளை செயலாளர் எனப் பரப்பப்படும் செய்தி போலியானது. வேலூர் அருகே கணவன் மற்றும் குழந்தையைக் கொலை செய்த சம்பவம் தொடர்பானவர்களின் புகைப்படங்களை வைத்து பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.