திமுக பிரச்சாரத்தில் இருந்த முஸ்லீம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடியென வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திராவிட முன்னேற கட்சியின் பிரச்சார வாகனத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் கட்சியின் கொடியை பாகிஸ்தான் கொடி எனக் கூறி இப்புகைப்படத்தை அஜய் கிருஷ்ணா என்பவர் முகநூலில் பகிர்ந்து இருக்கிறார்.
அவரது முகநூல் பக்கத்தை ஆராய்கையில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவாளர் என அறிய முடிந்தது. அது பாகிஸ்தான் கொடி அல்ல, முஸ்லீம் லீக் கட்சியின் கொடி என சிலர் கூறியும் அப்பதிவை அவர் நீக்கவில்லை. மேலும், அவர் கூறியதை நம்பி பலரும் கமெண்ட் செய்து வருவதையும் பார்க்க முடிந்தது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்(ஐயுஎம்எல்) கட்சி 3 இடங்களை பெற்றது. இந்தியாவில் உள்ள முஸ்லீம் லீக் கட்சிகளின் கொடிக்கும், பாகிஸ்தான் கொடிக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.
மேலும் படிக்க : பாகிஸ்தான் கொடிக்கும், கட்சிக் கொடிக்கும் வித்தியாசமே தெரியாதா?
பச்சை நிற கொடியில் பிறையும், நட்சத்திரமும் இருந்தால் அதை பாகிஸ்தான் கொடி என சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்கள். இந்திய அளவில் பலமுறை இதுபோன்ற வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள், அதுதொடர்பாக நாமும் பதிவிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : பெங்களூரில் பாகிஸ்தான் கொடி என நினைத்து முஸ்லீம் லீக் கொடியை அகற்றிய போலீஸ் !
கடம்பத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நரசிங்கபுரத்தில் தனது பிரச்சாரத்தை இனிதே துவங்கிய கழக வெற்றி வேட்பாளர் திரு. வி. ஜி. ராஜேந்திரன் எம். எல். ஏ. அவர்கள்…. பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்து கேட்டார்…..
#thiruvallurdistrict #vgr #வெற்றி_வேட்பாளர்_VGR #vgr4thiruvallur pic.twitter.com/p15aDemab1
— V G Rajendran (@VGRajendranDMK) March 16, 2021
வைரல் செய்யப்படும் புகைப்படம் குறித்து தேடுகையில், ” கடம்பத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நரசிங்கபுரத்தில் தனது பிரச்சாரத்தை இனிதே துவங்கிய கழக வெற்றி வேட்பாளர் திரு. வி. ஜி. ராஜேந்திரன் எம்.எல்.ஏ அவர்கள். பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்து கேட்டார் ” என திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உடைய ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் இப்பதிவை ஷேர் செய்துள்ளது.
முடிவு :
நம் தேடலில், திருவள்ளுவர் தொகுதி திமுக எம்எல்ஏவின் பிரச்சார வாகனத்தின் முகப்பில் கூட்டணி கட்சிகளின் கொடிகளை மாட்டி இருக்கிறார்கள். அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியும் இடம்பெற்று இருக்கிறது. அதை பாகிஸ்தான் கொடி என வதந்தி பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.