திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்

பரவிய செய்தி

ஆவடி நாசரின் மதவெறிக்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது சரியா முதல்வரே ?

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான சமையல் பட்டர் பாக்கெட்டில் “ ஹலால் சான்றிதழ் ” என இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார், ” திமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தன்னுடைய மதவெறிக்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதாக எனக் கூறி முதல்வரை டக் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

Archive link 

Archive link 

இதையடுத்து, பெரும்பான்மையான இந்துக்கள் வாங்கும் ஆவின் பொருட்களில் எதற்காக ஹலால் சான்றிதழ் எனக் கூறி பாஜக ஆதரவாளர்கள் பலரும் இந்த படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். ஆனால், புகைப்படத்தில் உள்ள ஆவின் பட்டர் பாக்கெட் எங்கு வாங்கப்பட்டது என யாரும் குறிப்பிடவில்லை.

உண்மை என்ன ? 

பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டு இஸ்லாமிய நாடுகளில் விற்பனை செய்யும் உணவு பொருட்கள்  ஹலால் முறையில் தயாரிக்கப்பட்டதாக காண்பிக்க ஹலால் சான்றிதழ் பெறப்பட்டு ஹலால் லோகோ இடம்பெறும். குறிப்பாக, இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

Archive link 

ஆவின் தயாரிப்பில் ஹலால் சான்றிதழ் இருப்பதாக வலதுசாரிகள் கண்டனம் தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சியில் ஆவின் பால் பொருளில் ஹலால் சான்றிதழ் எதற்கு என இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பி இருந்தது. அப்போதே ஆவின் தயாரிப்பின் இப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்தார்.

2018ல் அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் மலேசியா, அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு பால் மற்றும் பால் சார்ந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. 2021 ஆகஸ்ட் மாதம் திமுக அரசு ஆண்டுக்கு 60 கோடி மதிப்பில் ஆவின் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக செய்தியில் வெளியாகி உள்ளது.

இந்திய நிறுவனங்கள் இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் பெற்று விற்பனைக்கு அனுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் பால் பொருட்களில் ஹலால் சான்றிதழ் இடம்பெற்று இருக்கிறது.

பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் அமுல் நிறுவனம்  தரப்பில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் கூட ஹலால் சான்றிதழ் பெறப்பட்டு இருக்கிறது.

இதையெல்லாம் விட, பாபா ராம்தேவ் உடைய பதஞ்சலி நிறுவனத்தில் இருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு கத்தார் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹலால் விதிமுறைக்கு இணக்கமில்லை எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது தொடர்பாக நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : பதஞ்சலி பொருட்களுக்கு கத்தார் நாட்டில் தடையா ?

ஐஎம்சி எனும் நிறுவனம் விற்பனை செய்யும் கோமியத்திற்கு கூட ஹலால் எனக் குறிப்பிட்டு இருப்பதை பார்க்கலாம்.

இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள ஆவின் பாலகத்திற்கு நேரில் சென்று, அங்கு விற்பனை செய்யப்படும் 2022 செப்டம்பர் மாதம் தேதியிட்ட சமையல் பட்டர் பாக்கெட்டை வாங்கிப் பார்க்கையில் ஹலால் சான்றிதழ் இடம்பெறவில்லை. மாறாக, ” IS/ISO 22000 Certified Organisation “ என்றே இடம்பெற்று இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர் நாசர் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக பாஜகவினர் பரப்பும் தகவல் வதந்தியே. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் பால் தயாரிப்புகளில் ஹலால் சான்றிதழ் இடம்பெற்று வருகிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader