திமுக ஆட்சியில் கயிற்றால் கட்டப்பட்ட அரசு பேருந்து எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
நாம சந்திரனுக்கு விக்ரம் லேண்டர் விட்டாலும் திராவிட மாடல் இப்படிதான்பா.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்திற்கு அருகில் ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறக்கியது.
இந்நிலையில், சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பினாலும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்தின் நிலை மோசமாகத்தான் உள்ளது எனப் புகைப்படம் ஒன்றினை அதிமுகவைச் சேர்ந்த கௌரி சங்கர், சவுக்கு சங்கர் ஆர்மி உட்படப் பலரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பரப்பி வருகின்றனர். அந்த படத்தில் உள்ள பேருந்தின் பின் பகுதி கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ளது.
சந்திரனுக்கு விக்ரம் லேண்டர் விட்டாலும் நம்ம #பொம்மைமுதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பஸ்க்கு புத்தூர் கட்டு தான் போடுவார் …
யாரு சாமி அவன் pic.twitter.com/0y6CBzIvJY— Gowri Sankar D (@GowriSankarD_) August 24, 2023
நாம சந்திரனுக்கு விக்ரம் லேண்டர் விட்டாலும்
#திராவிடமாடல் இப்படிதான்பா #மண்டிபோடும்DMK pic.twitter.com/gqRR8zGpX3— N.D.Rakesh B.COM,MBA👑 (@Admkrakesh) August 24, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய பேருந்தின் எண், அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் பெயர், பேருந்தின் நிறம் முதலியவை கொண்டு அது தமிழ்நாடு அரசு பேருந்து என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேற்கொண்டு பரவக் கூடிய படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் ‘ரிலாக்ஸ் ப்ளீஸ்’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் அப்படம் பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பதிவில் ‘பென்ஸ் காரில் இருக்கும் அனைத்து வசதிகளும் அரசு பேருந்த்தில் உள்ளது : போக்குவரத்து துறை அமைச்சர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே புகைப்படம் 2018, ஜனவரி மாதம் ‘நமது’ எனும் தளத்திலும் பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பான செய்தி ஒன்றுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து பரவும் பேருந்து படமானது தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிகிறது. 2018ம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிமுக என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : திமுக அரசு புதிய பேருந்து வாங்க ரூ50 லட்சம், பழைய பேருந்தை புதுப்பிக்க ரூ 42 லட்சம் செலவிட்டதாகப் பரவும் பொய்
இதற்கு முன்னர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்து, அதற்கான பணிகளையும் செய்தது. அது குறித்தும் தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு அரசு பேருந்தின் மோசமான நிலை என சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல. அது 2018ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் உள்ளது. அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக என்பதை அறிய முடிகிறது..