திமுக அரசு தாம்பரத்தில் ராமர் கோயிலை இடித்ததாகப் பழைய வீடியோவைப் பரப்பும் பாஜகவினர்

பரவிய செய்தி

இன்றைய தாம்பரம் ராமர் கோவில் இடிப்பு திராவிட தி.மு.க. அவருக்கு வாக்களித்த இந்துக்களுக்கு

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

” சென்னை தாம்பரத்தில் உள்ள ராமர் கோயிலை திமுக அரசு இன்று இடித்துள்ளது. தமிழ்நாட்டில் நமது கலாச்சாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது “என வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வலதுசாரி ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். இதனை தமிழக பாஜகவைச் சார்ந்த வினோஜ் பி செல்வம் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவினை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதனை கூகுல் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடினோம். இது தொடர்பாக ‘இந்தியா டுடே’ இணையதளத்தில் 2022, ஜனவரி 11ம் தேதி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சென்னைக்கு அருகே தாம்பரம் வரதராஜபுரத்தில் நீர் நிலையினை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் 2015 உயர் நீதிமன்ற உத்தரவுக்குணங்க இடிக்கப்பட்டது.

அந்த நடவடிக்கையில் வரதராஜபுரத்தில் கோயில், தேவாலய சுவரின் ஒரு பகுதி, தனிநபரின் கட்டிடங்கள் என நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகத் தாம்பரம் காவல்துறை ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ இணையப் பக்கத்திலும் இது குறித்து ஜனவரி 11ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், வரதராஜபுர ஆஞ்சநேயர் கோயில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. எனவே கோயிலை இடிக்க முடிவு செய்ய  வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறை கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி பின்னர் இடிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 2021, டிசம்பர் 19ம் தேதி கோவிலை இடிக்க சென்ற போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் மீது ஏறிக் கொண்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். பின்னர், 2022 ஜனவரி 11ம் தேதி இடிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்டதே இவ்வீடியோ.

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் 150 கோவில்கள் இடிக்கப்பட்டனவா ? குஜராத்தில் 80 கோவில்கள் ஏன் இடிக்கப்பட்டது தெரியுமா ?

திமுக ஆட்சியில் 150 கோயில்கள் இடிக்கப்பட்டதாக வலதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் உண்மைத்தன்மை குறித்து கடந்த ஜனவரி 24ம் தேதி ‘யூடர்ன்’ கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோயில் இடிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், திமுக ஆட்சியில் தாம்பரத்தில் ராமர் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தற்போது நிகழ்ந்தது அல்ல. 2015 உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நீர்நிலைகளில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோயில் 2022 ஜனவரியில் இடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது நிகழ்ந்து போல் மீண்டும் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader