This article is from Jan 17, 2022

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டதா ?

பரவிய செய்தி

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

திமுகவின் 6 மாத ஆட்சியில், வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டது என வெள்ளை அறிக்கை கூறுவதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

கடந்த 6 மாத திமுகவின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் 2021 ஆகஸ்ட் 09-ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அப்போது திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகி இருந்தன.

Facebook link  

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை தொடர்பாக வெளிப்படையான விளக்கத்தை தரும் வெள்ளை அறிக்கையை 2021 ஆகஸ்ட் 9-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கையில், ” சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான ஒப்பீட்டு ஆய்வின்படி, 2004-05 முதல் 2011-12 வரையுள்ள காலத்திற்கான சராசரி வளர்ச்சியில், தமிழ்நாடு பெரிய மாநிலங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், 2012-13 முதல் 2018-19 வரையுள்ள காலத்தில் தமிழ்நாடு 11-வது இடத்தை அடைந்ததுடன், அதன் சராசரி வளர்ச்சியும், முந்தைய 7 ஆண்டுகளின் வளர்ச்சியான 10.3 சதவீதத்தைக் காட்டிலும் 3.2 சதவீதப் புள்ளிகள் குறைவாக, அதாவது 7.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது ” எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், திமுகவின் 6 மாத ஆட்சியில் வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டது எனப் பரவும் தகவல் தவறானது.

2021 ஆகஸ்ட் மாதம் கடந்த அதிமுக ஆட்சி குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்த நியூஸ் கார்டை தற்போது தவறாக பரப்புகின்றனர்.

2012-13 முதல் 2018-19 வரையிலான அதிமுக ஆட்சிக்கு காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்றதாக திமுக அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தை, திமுகவின் 6 மாத ஆட்சியில் நிகழ்ந்ததாக வதந்தி பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader