திமுக அரசு புதிய பேருந்து வாங்க ரூ50 லட்சம், பழைய பேருந்தை புதுப்பிக்க ரூ 42 லட்சம் செலவிட்டதாகப் பரவும் பொய்

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மகளிருக்கு சாதாரண நகர மற்றும் உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை 2021, மே 7 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி இதுவரை பயணம் செய்தவர்களுக்கான கட்டண தொகை 4,985.76 கோடியாக உள்ளதாகவும், சென்னையில் மட்டும் நடத்திய ஆய்வின் படி, பெண்கள் மாதத்திற்கு சுமார் 50 முறை பேருந்தில் பயணிப்பதாகவும் அரசு தகவல் அளித்துள்ளது.
எனவே பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வது குறித்தும், பழைய பேருந்துகளை புதுப்பிப்பது குறித்தும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல அரசாணைகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் “திராவிட ஆட்சியில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தால் 500 கோடி ரூபாய். ஒரு பேருந்தின் விலை 50 இலட்சம் ரூபாய். ஆனால் அடிச்சட்டம் சரியாக உள்ள 100 பேருந்துகளை புதுப்பிக்க ஆன செலவு 52 கோடி ரூபாய். ஒரு பேருந்தை புதுப்பிக்க ஆன செலவு 42 இலட்சம் ரூபாய். புது பேருந்தின் விலையே 50 இலட்சம் ரூபாய் தான். ஆனால் நல்ல நிலையில் இருக்கும் பேருந்தை புதுப்பிக்க ஒரு பேருந்துக்கு ஆன செலவு 42 இலட்சம் ரூபாய்.” என்று குறிப்பிடப்பட்ட சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதைக் காண முடிகிறது.
ஊஊஊஊஊ🔥🔥🔥🔥 pic.twitter.com/HJaUFnovav
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) August 16, 2023
மக்களே திருட்டு திராவிடிய மாடலின் திருட்டுத்தனத்தைப் பாருங்கள்.
1000 புதிய பஸ்களை கொள்முதல் செய்தால், 500 கோடி ரூபாய். ஒரு பஸ்ஸின் விலை 50 இலட்சம் ரூபாய்.
ஆனால்,
அடிச்சட்டம் சரியாக உள்ள 100 பஸ்களை புதுப்பிக்க ஆன செலவு 52 கோடி ரூபாய். ஒரு பஸ்ஸை புதுப்பிக்க ஆன செலவு 42 இலட்சம்.— Muthukumar Subbaiah (@smkumarlakshmi) August 14, 2023
இப்பதிவை சவுக்கு சங்கர் எனும் பெயரில் இயங்கும் போலியான ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. அதை வலதுசாரி ஆதரவாளர் சரவணா பிரசாத் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
பரவி வரும் பதிவுகள் குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை செயலர் கே.பணீந்திர ரெட்டி கடந்த ஆகஸ்ட் 11 அன்று பிறப்பித்த செய்தி வெளியீடு கிடைத்தது.
அதில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்டி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும், அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை 152.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 15 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 32 பேருந்துகளும், என மொத்தம் 100 பேருந்துகள் 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கும், 1000 பழைய பேருந்துகளை புதுப்பிப்பதற்கும் சேர்த்து தான் மொத்தமாக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும், தற்போது முதற்கட்டமாக 100 பழைய பேருந்துகள் 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @KPonmudiMLA @sivasankar1ss @PKSekarbabu pic.twitter.com/kvSMSPS5NA
— TN DIPR (@TNDIPRNEWS) August 11, 2023
மேலும், ” தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் ” என ஆகஸ்ட் 11ம் தேதி TN DIPR ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டு உள்ளது.
எனவே 100 பேருந்துகளை புதுப்பிக்க ஆன செலவு 52 கோடி ரூபாய் என்றும், ஒரு பேருந்தை புதுப்பிக்க ஆன செலவு 42 இலட்சம் ரூபாய் என்றும் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது. அரசு அறிவிப்பின் படி ஒரு பேருத்தை புதுப்பிக்க ஆன செலவு 14 லட்சத்து 90 ஆயிரம்.
இதை அறியாமல், சமூக ஊடகங்களில் பலரும் புதிய பேருந்துகளை அரசு வாங்கவில்லை, பழைய பேருந்துகளை தான் பெயிண்ட் அடித்து மாற்றி உள்ளனர் என்றும், பழைய பேருந்துகளின் நம்பர் பிளேட்கள், புதிய பேருந்துகளில் உள்ளதை பாருங்கள் என்றும் விமர்சித்து பழைய பேருந்துகளின் புகைப்படங்களை தவறாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தரப்பில் புதுப்பித்துள்ள 100 பேருந்துகளில், ஒரு பேருந்தின் புகைப்படம் தான் இவை என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் படிக்க: அதிமுக ஆட்சியில் எடுத்த அரசு பேருந்து படத்தை தற்போது எடுக்கப்பட்டது போல் பதிவிட்ட சி.டி.நிர்மல் குமார் !
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் படிக்கட்டு இல்லாமல் இயங்கும் அரசுப் பேருந்து என பாஜகவினர் பரப்பும் 2018ல் எடுத்த வீடியோ !
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சியில் புதிய பேருந்தின் விலை ரூ.50 லட்சம், ஆனால் பழைய பேருந்தை புதுப்பிக்க ஆகும் செலவு ரூ.42 லட்சம் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் செய்தி வெளியீட்டின் படி, ஒரு பழைய பேருத்தை புதுப்பிக்க ஆன செலவு 14 லட்சத்து 90 ஆயிரம் என்பதை அறிய முடிகிறது.