கலைஞர் ஆட்சியில் அதிக லஞ்சம் வாங்கப்பட்டது என ஸ்டாலின் பேசியதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ !

பரவிய செய்தி
யாருடா முதலில் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள் எனப் பார்த்தீர்கள் என்றால் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் தான் – மு.க.ஸ்டாலின்
Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது அதிகம் லஞ்சம் வாங்குவது யார் எனப் பார்த்தால் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் இருக்கும் எனக் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லை திமுக காரங்களுக்கு சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டால் தான் சொரணை வரும் சொரணை இல்லாத திமுக கல்லா கட்டுவது கழக உடன்பிறப்பின் கடமைகள் pic.twitter.com/uJ8tIz0HRn
— A Senthil Kumar (@ASenthi12447593) August 24, 2022
தளபதி தீ தளபதி 🔥🔥🔥🔥 pic.twitter.com/PqmM7xSNX7
— Stand With Savukku (@standwithsavukk) February 15, 2023
உண்மை என்ன ?
ஸ்டாலின் பேசும் வீடியோவில் அவருக்குப் பின்னால் உள்ள பேனரைக் கொண்டு தேடியதில் அந்நிகழ்ச்சி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பதை அறிய முடிந்தது. மேலும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு தேடியதில் அந்நிகழ்ச்சியின் 54 நிமிட முழு வீடியோ மு.க.ஸ்டாலின் என்ற யூடியூப் பக்கத்தில் கிடைத்தது.
2021, ஜனவரி 30ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட படைப்பாக்கத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அந்த வீடியோவின், 15 நிமிடத்தில் “நானும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து இருக்கிறேன். ஆனால், நல்லாட்சி என்ற பெயரைப் பெற்ற வகையில் நான் எனது துறையைச் செய்தேன் என்பது இந்த நாட்டுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும். ஆனால், இப்போது ஒரு உள்ளாட்சித் துறை அமைச்சர் இருக்கிறார். அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் இல்லை. ஊழலாட்சித்துறை அமைச்சர்.
இன்று எடப்பாடியில் இருந்து கடைசியாக இருக்கக் கூடிய மந்திரி வரை கணக்கெடுத்துப் பார்த்தால், யாருடா முதலில் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள் எனப் பார்த்தீர்கள் என்றால், இந்த உள்ளாட்சித் துறை அமைச்சர்தான் அதிகமாக லஞ்சம் வாங்கி இருக்கிறார். அவருக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும்” எனப் பேசி இருக்கிறார்.
அதே வீடியோவில் 19வது நிமிடத்திற்கு மேல் அணைகளைப் பற்றிப் பேசும் போது, “இந்தியாவிலேயே அதிக ஆணை இருப்பது தமிழ்நாடுதான். அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சிக் காலத்தில் அதிக அணைகள் கட்டப்பட்டது என்றால், கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தான்” எனக் கூறி இருக்கிறார்.
ஸ்டாலின் உள்ளாட்சித் துறை ஊழல் பற்றிப் பேசியதையும், கலைஞர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் பற்றிப் பேசியதையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து ‘தி இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் 2021, ஜனவரி 30ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும், “அதிகம் லஞ்சம் வாங்கியது என்று பார்த்தால் உள்ளாட்சித் துறை அமைச்சர்தான் முதலில் உள்ளார்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ‘வேறுபாடு இல்லாமல் கற்பழிப்பு’ என முதலமைச்சர் பேசியதாகத் தவறானச் செய்தி வெளியிட்ட ஜெயா ப்ளஸ் !
மேலும் படிக்க : முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டினருக்கு பொங்கல் தொகுப்பு கொடுத்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
முன்னதாக ஸ்டாலின் பற்றி பரவிய வதந்திகள் குறித்து அதன் உண்மைத் தன்மையை யூடர்ன் செய்தியாக வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், யார் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள் எனப் பார்த்தால் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் தான் இருக்கும் என ஸ்டாலின் பேசியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.