திமுக மம்தாவோடு கூட்டணி கூடாது என அருணன் கூறியதாக பாஜக கல்யாண் ராமன் பரப்பும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல. கம்யுனிஸ்டுகளை வேரரறுத்த மம்தா பேனர்ஜியோடு திமுக உறவு வைத்துக் கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை மம்தாவோடு திமுக முன்றாவது அணிக்கு முயன்றால் கூட்டணியை விட்டு வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அருணன்.
மதிப்பீடு
விளக்கம்
வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் நேர் எதிர் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவை.
இந்நிலையில் திமுக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்க முயன்றால் திமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் பேராசிரியர் அருணன் கூறியதாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
25 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்ட பின் எதற்கு இந்த வீராப்பு pic.twitter.com/G96JnBY5IK
— Kalyan Raman (@KalyaanBJP_) February 22, 2023
போனால் போகிறதென 25 கோடி கொடுத்து,4 எம்பிக்களை வெற்றி பெற வைத்த கட்சியை இவர் மிரட்டுகிறாராம்! pic.twitter.com/o8rWdKSVkQ
— Paranthaman BJP (@bjp_paranthaman) February 21, 2023
இதனை பாஜக சிந்தனையாளர் பிரிவு பொறுப்பாளர் கல்யாண் ராமன் ட்வீட் செய்ய, அதனை அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ரீட்வீட் செய்துள்ளார். மேலும் பல்வேறு பாஜகவினரும் அந்த நியூஸ் கார்டினை பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பேராசிரியர் அருணன் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டில் பல எழுத்துப் பிழைகள் உள்ளது. மேலும், தந்தி டிவி தற்போது வெளியிடும் நியூஸ் கார்டின் வடிவத்திலும் இல்லை.
பரவக் கூடிய புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி ராம் தேவர் என்ற டிவிட்டர் பக்கத்தில் தற்போது பரவக் கூடிய அதே நியூஸ் கார்டு பதிவிட்டுள்ளதைக் காண முடிந்தது.
https://twitter.com/ramthevar9/status/1495519940861784064?lang=bn
அந்த நியூஸ் கார்டில், ‘15.02.2022’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு தந்தி டிவி சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். அந்த தேதியில் அப்படி எந்த நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை.
பேராசிரியர் அருணன் பரவக் கூடிய கார்டில் இருப்பது போல ஏதேனும் கருத்து கூறினாரா என கீ வேர்டுகளை கொண்டு இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
இதிலிருந்து, பேராசிரியர் அருணன் கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : தமிழ்நாடு ‘பாஜகவின் ஐடி விங்’ தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு
முன்னதாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளை தொகுப்பாக யூடர்ன் வெளியிட்டுள்ளது. அதே போல் கல்யாண் ராமன் பரப்பிய பொய் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்தும் கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : பிரிட்டனின் பிரதமரானதும் ரிஷி சுனக் மனைவியுடன் கோமாதா பூஜை செய்தாரா ?
மேலும் படிக்க : இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட் : பழைய படத்தை திமுக ஆட்சியெனப் பரப்பும் பாஜகவின் கல்யாண் ராமன் !
முடிவு :
நம் தேடலில், திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல என்றும், அப்படி திமுக மூன்றாவது அணி அமைக்க முயன்றால் கூட்டணியை விட்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறிவிடும் எனப் பேராசிரியர் அருணன் கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.