தேர்தல் வாக்குறுதி குறித்து துரைமுருகன் கூறியதாக அதிமுகவினர் பரப்பும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை கருத்து. தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிற போது மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது ஆட்சியை பிடித்த பிறகு வாக்குறிதிகளை நிறைவேற்ற சொல்லி உதயநிதியை பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை அமைச்சர் துரைமுருகன்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக் கருத்து கூறியதாகத் ‘தந்தி டிவி’ நியூஸ் கார்டு ஒன்று அதிமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த நியூஸ் கார்டில், ஆட்சியை பிடித்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூறி உதயநிதியிடம் கேட்பது நியாயம் இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிற போது மக்கள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என அமைச்சர் பேசியதாக உள்ளது.
உண்மை என்ன ?
தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டில் ‘11.02.2022’ எனத் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அன்றைய தேதியில் அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் தந்தி டிவி பதிவிடவில்லை.
மேலும், அன்றைய தினங்களில் அமைச்சர் துரைமுருகன் அத்தகைய கருத்துகள் ஏதேனும் கூறினாரா? என்பது குறித்துத் தேடினோம். 2022, பிப்ரவரி 10ம் தேதி வேலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன், “நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. காரணம் என்ன? ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகிறது. இந்த 8 மாதத்தில் நிர்வாகத்தைக் கவனிக்க எங்களுக்கு நேரமே இல்லை. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா வந்தது.
அந்த கொரோனவிலே எடுத்த முடிவு. ஆட்சி செய்வதா? மக்களின் உயிரைக் காப்பாற்றுவதா? என்கிறபோது தளபதி சொன்னார். எனக்கு முதலமைச்சர் பதவி முக்கியம் அல்ல. எத்தனை உயிர்களைக் காப்பாற்றினேன் என்பதுதான் நான் செய்ய வேண்டிய பணி என்றார்” எனப் பேசியுள்ளார்.
தற்போது பரவக் கூடிய நியூஸ் கார்டு அன்றைய தினங்களிலேயே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது. அதனைத்தான் தற்போது மீண்டும் அதிமுகவினர் பரப்பி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 14ம் தேதி அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்” என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
“எதிர் கட்சிக்காரர் அப்படித்தான் சொல்லுவார். ஆஹா… திமுக பரவாயில்லை என்றா சொல்லுவார்? அவர் எதிர்க் கட்சி அந்த நிலையில் சொல்லுகிறார். வேறு ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார். இதனைத் தவிரத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எந்த கருத்தும் அவர் கூறவில்லை.
மேலும் படிக்க : நயினார் காதை சொறிந்தால் அதிமுக வெளிநடப்பு செய்யும் என துரைமுருகன் பேசியதாகப் போலிச் செய்தி !
முடிவு :
நம் தேடலில், அமைச்சர் துரைமுருகன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிறபோது அதனை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனப் பேசியதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. அமைச்சரும் அப்படிப் பேசவில்லை. தந்தி தொலைக்காட்சியும் அப்படி ஒரு நியூஸ் கார்டினை வெளியிடவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.