பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

பரவிய செய்தி
மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார். ஆனால், மக்களுக்கு நன்றி இல்லை – அமைச்சர் சக்கரபாணி
ரேஷனில் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பரிசுத்தமானது. அரசு இலவசமாக வழங்குவதை குறை சொல்லக்கூடாது. பிடிக்காதவர்கள் வாங்க வேண்டாம் – உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி .
மதிப்பீடு
விளக்கம்
தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் தரமற்றப் பொருட்கள் இருப்பதாகவும், கலப்படம் செய்த பொருட்களை வழங்கி இருப்பதாகவும் மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கையில் எடுத்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் என்றும், ஆனால் மக்களுக்கு நன்றியே இல்லை என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக நியூஸ் 7 தமிழ் மற்றும் மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பொங்கல் தொகுப்பை வாங்க வேண்டாம் எனக் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டுகள் பரவி வருகிறது.
இந்த நியூஸ் கார்டை தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
உண்மை என்ன ?
அமைச்சர் சக்கரபாணி குறித்து பரவும் நியூஸ் கார்டு பற்றி நியூஸ் 7 தமிழ் உடைய சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், அவ்வாறான செய்தி ஏதும் வெளியாகவில்லை. மாறாக, ” இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை ” என வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டை மறுத்து பதிவிட்டு இருக்கிறார்கள்.
இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லைhttps://t.co/WciCN2SQmv | #Fakenews | #News7tamilupdates | #news7tamil pic.twitter.com/2zTJNbt6bs
— News7 Tamil (@news7tamil) January 19, 2022
இதேபோல், அமைச்சர் சக்ரபாணி குறித்து பரப்பப்படும் தந்திடிவி குறித்து சேனலின் சமூக வலைதள பக்கங்களை ஆராய்கையில், அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவே இல்லை. அதுவும் எடிட் செய்யப்பட்டது.
இதேபோல், பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம்! பணமும் கேட்டால் நாங்கள் என்ன செய்ய ?? சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே 5000 தருவோம் என்று சொன்னோம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக போலியாக எடிட் செய்யப்பட்ட தந்தி டிவி நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய 5 திமுகவினர் கைதா ?
சமீபத்தில், முன்னணி ஊடகங்களின் செய்தித்தாள் பக்கங்கள் மற்றும் நியூஸ் கார்டுகளில் போலியாக எடிட் செய்யப்பட்ட செய்திகளை தவறாக பரப்புவது குறித்து நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.
மேலும் படிக்க : குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ விவகாரத்தில் அண்ணாமலை பற்றிப் பரவும் போலிச் செய்திகள் !
முடிவு :
நம் தேடலில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து திமுக அமைச்சர் சக்கரபாணி கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டுகள் போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.