திமுக அமைச்சர் ரூ6.5 கோடிக்கு 1,154 சைக்கிள்கள் வழங்கியதாக தினத்தந்தி வெளியிட்ட தவறான செய்தி

பரவிய செய்தி

நாமக்கல் மாவட்டத்தில் 1,154 மாணவ-மாணவிகளுக்கு ரூ.6½ கோடியில் விலையில்லா சைக்கிள்கள் – அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அப்போ ஒரு மாணவிக்கு கொடுக்கிப்பட்ட ஒரு சைக்கிள் விலை Rs.56325 ஆஹ். என்னங்கடா இப்படி ஓப்பனாவே பண்றீங்க.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஆகஸ்ட் 23-ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் 1,154 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ6.5 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார் எனத் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியைக் கொண்டு 1154 சைக்கிள்களின் விலை 6.5 கோடி ரூபாய். அப்போ ஒரு சைக்கிளின் விலை ரூ.56,325 என சமூக வலைத்தளங்களில் பாஜகவினரால் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

தினத்தந்தி வெளியிட்ட செய்தி தொடர்பாக அமைச்சர் மதிவேந்தன் டிவிட்டர் பக்கத்தில் தேடிய போது, ஆகஸ்ட் 23-ம் தேதி நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது தொடர்பாக ட்வீட் செய்து உள்ளார்.

Twitter link 

பின்னர் 25-ம் தேதி நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், வடுகம் மற்றும் அத்தனூர் உடுப்பத்தான் புதூர் ஆகிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் 25-ம் தேதி நிகழ்ச்சி குறித்து தி ஹிந்து ஆங்கில பத்திரிகை, “Minister distributes free bicycles to students in Namakkal “என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு உள்ளது. இதில் புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், வடுகம் மற்றும் பட்டணம் ஆகிய பள்ளிகளிலுள்ள 452 மாணவர்களுக்கு ரூ.23.03 லட்ச மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்படி ஒரு சைக்கிளின் விலை ரூ.5,095.

நாமக்கல் மாவட்டத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் தொடர்பாகத் தினமணி செய்தி இணையதளத்தில், “12,969 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்: அமைச்சர் எம்.மதிவேந்தன் வழங்கினார்” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் 90 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6,385 மாணவர்களுக்கும், 6,584 மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு சைக்கிளின் விலை ரூ.5,175 என்றும், மாணவிகளுக்கான ஒரு சைக்கிளின் விலை ரூ.4,992 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 12,969 சைக்கிளின் மதிப்பு ரூ.6,59,09,703 (3,30,42,375 + 3,28,67,328) என அறிய முடிகிறது. மொத்த மதிப்பு ரூ6.59 கோடி என தினமணி செய்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஜூலை 25, 2022 அன்று தமிழக முதலமைச்சர் 323 கோடி ரூபாய் செலவில் 6.35 லட்ச பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தினை தொடக்கி வைத்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-ன் Edex live இணையதளம் ” TN begins distribution of bicycles to 6.35 lakh Class 11 students, spends Rs 323 Cr ” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிட்டால் ஒரு சைக்கிளின் விலை ரூ.5,086 ஆகும்.

முடிவு :

நம் தேடலில், நாமக்கல் மாவட்டத்தில் 1,154 மாணவ-மாணவிகளுக்கு ரூ.6.5 கோடியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது என வெளியிட்ட செய்தி தவறானது. நாமக்கல் மாவட்டம் முழுவதுமாக 12,969 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிளின் மதிப்பே ரூ.6.5 கோடி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader