திமுக ஆட்சியில் பள்ளியில் பாதிரியார் நடனம் ஆடுவதாக 5 ஆண்டுகள் பழைய வீடியோவை பரப்பும் கிஷோர் கே சுவாமி

பரவிய செய்தி

பள்ளிக்குழந்தைகளை இப்படித்தான் வளர்க்கணும் , இதுவே திராவிட மாடல் , உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை கல்வி அமைச்சரா டங்கா மாரி தான்

மதிப்பீடு

விளக்கம்

திமுக ஆட்சியில் அன்பில் மகேஷ் போன்றோரை கல்வி அமைச்சராக ஆக்கினால் பள்ளியில் டங்க மாரிதான் எனக் கூறி பள்ளி வளாகத்தில் பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி ஒருவரும் டங்க மாரி பாடலுக்கு நடனமாடும் 44 நொடிகள் கொண்ட வீடியோவை அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி ட்விட்டரில் விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை அதிமுக ஆதரவாளர்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ? 

அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர்ந்து 4 நாட்களாக குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டுகொள்ளவில்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்தான், மாணவர்கள் மத்தியில் பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி ஒருவர் நடனம் ஆடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019ம் ஆண்டு தமிழ் இந்து தேசம் எனும் யூடியூப் சேனலில் இந்த வீடியோ பதிவாகி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

மேற்கொண்டு தேடுகையில், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி மணிகண்டன் என்பவரது முகநூல் பக்கத்தில் 49 நொடிகள் கொண்ட இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.  அப்போது ஆட்சியில் இருந்து அதிமுக. 

மேலும் படிக்க :  அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சுவாமி பதிவிட்ட வதந்திகளின் தொகுப்பு 

மேலும் படிக்க : முதலமைச்சருக்கு 70 வயது அவரது ஆசிரியருக்கு 68 வயது எனப் பொய் பரப்பும் கிஷோர் கே சாமி !

இதேபோல், பல்வேறு தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை ட்விட்டர் தளத்தில் கிஷோர் கே சுவாமி தொடர்ந்து பரப்பி வருகிறார்.

முடிவு : 

நம் தேடலில், திமுக ஆட்சியில் அன்பில் மகேஷ் போன்றோர் கல்வி அமைச்சராக இருப்பதால் பள்ளியின் நிலை இதுதான் என அதிமுக ஆதரவாளர்களால் பரப்பப்படும் பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி நடனம் ஆடும் வீடியோ கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader