திமுக அமைச்சர் விசிக எம்எல்ஏவிற்கு இருக்கை அளிக்கவில்லை எனப் பொய் பரப்பும் அதிமுகவினர் !

பரவிய செய்தி
VCK நிர்வாகிகள் மற்றும் MLA சிந்தனைச் செல்வன் திமுக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் முன்பு… இது என்ன மாதிரியான கலாச்சாரம் அறிவாலயம்?
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களைச் சந்திக்க விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் சென்ற போது, இருக்கைகள் இருந்தும் அவரை அமைச்சர் நிற்க வைத்துப் பேசியதாகப் புகைப்படம் ஒன்றை அதிமுக-வை சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் இதே தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
VCK நிர்வாகிகள் மற்றும் MLA சிந்தனைச் செல்வன் திமுக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் முன்பு…
இது என்ன மாதிரியான கலாச்சாரம் @arivalayam ? pic.twitter.com/tRTrGfR18X
— Er Vignesh (@FrankVignesh) November 14, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். இந்நிகழ்வின் போது சிந்தனை செல்வனுடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.ஆனந்த மணி என்பவர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அங்கு நடந்த உரையாடல் மற்றும் நிகழ்வுகளையும் பதிவிட்டுள்ளார். அப்படங்களில் சிந்தனை செல்வனும் அவருடன் இருப்பவர்களும் இருக்கையில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.
இந்நிகழ்வு கடந்த (நவம்பர்) 11ம் தேதி நடந்துள்ளது. அப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, ‘சிந்தனைச் செல்வன் அவர்கள் காரில் இருந்து இறங்கி எம்.ஆர்.கே அவர்களின் இல்லம் நோக்கி நடக்கத் தொடங்க, நாற்காலியில் அமர்ந்து தனது ஆசிரியர்களோடு மகிழ்வோடு பேசிக் கொண்டிருந்த அமைச்சர் MRK.பன்னீர் செல்வம் அவர்கள் அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று கரம் கூப்பி வணக்கம் வைத்து வரவேற்று இருக்கையில் அமரவைத்தார். உடன் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்ஒளி அவர்களும் அமர்ந்தார்’ என்றுள்ளது.
மேற்கொண்டு, பரஸ்பரமாக சில விஷயங்களைப் பேசிக்கொண்டதையும், வடலூர் நான்கு முனை சந்திப்பு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஃப்ரீ லெப்ட் தொடர்பான விஷயங்களைச் சட்டமன்ற உறுப்பினர் (சிந்தனை செல்வன்) முன்வைத்ததையும் அவர் பதிவு செய்துள்ளார். பிறகு அமைச்சரின் மகள் திருமணத்திற்குப் (அக்டோபர், 25ம் தேதி) புத்தர் சிலை அன்பளிப்பு தர இருந்ததைக் குறிப்பிட்டு அதனை தற்போது கொண்டு வந்ததையும் கூற, அமைச்சரும் தனது மருமகனை அழைத்துள்ளார்.
அப்போது “சிலையை வழங்குவதற்காக எழுந்து கொடுத்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெறும் தருவாயில் அமைச்சர் அமர்ந்தார்” என ஆனந்த மணியின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படத்தினைதான் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
சிலை வழங்கப்படும் போது அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உடன் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றுகொண்டு இருப்பதையும், சிந்தனை செல்வன் அவர்கள் அமைச்சருடன் பேசுகையில் இருக்கையில் அமர்ந்திருப்பதையும் படத்தில் காண முடிகிறது. ஆனால், அவர்களின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றை மட்டும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : மாரி செல்வராஜை உதயநிதி ஸ்டாலின் பிளாஸ்டிக் இருக்கையில் அமர வைத்ததாகப் பரப்பப்படும் பொய் !
இதேபோல் இருக்கை தொடர்பாகப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : முன்னாள் சபாநாயகர் தனபாலை இருக்கையில் அமர வைக்காத பழனிச்சாமி எனப் பரப்பப்படும் பொய் !
முடிவு :
நம் தேடலில், திமுவை சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் MRK.பன்னீர் செல்வம் அவரை சந்திக்க வந்த விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வனை இருக்கைகள் இருந்தும் நிற்க வைத்துப் பேசியதாகப் பரவும் படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அவர்கள் அமர்ந்து பேசிவிட்டுக் கிளம்பும் போது எடுக்கப்பட்ட படத்தினை மட்டும் தவறாக பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.