திமுக ஆட்சி வந்த உடன் சபரிமலைக்கு செல்வேன் என கனிமொழி கூறினாரா ?

பரவிய செய்தி
திமுக ஆட்சிக்கு வந்த உடன் திமுக மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் – கனிமொழி எம்.பி பேச்சு
மதிப்பீடு
விளக்கம்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக மகளிரணி உடன் சபரிமலைக்கு செல்வேன் என எம்.பி கனிமொழி பேசியதாக பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் ” இந்துக்களே நன்றாக பாருங்க ” எனப் பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.
தமிழக தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், கனிமொழி தனது பிரச்சாரத்தில் சபரிமலைக்கு செல்வேன் என பேசியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
வைரல் செய்யப்படும் பாலிமர் செய்தி நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், பாலிமர் செய்தியின் முகநூல் பக்கத்தில் மார்ச் 27-ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளில் கனிமொழி குறித்தோ, வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டோ இடம்பெறவில்லை.
” சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி ” என மார்ச் 27-ம் தேதி வெளியான நியூஸ் கார்டில் செய்தியிக்கு பின்னால் நிறுவனத்தின் லோகோ இருப்பதை காணலாம். ஆனால், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் லோகோ இல்லை. இது எடிட் செய்யப்பட்டது எனத் தெளிவாகிறது.
வைரல் செய்யப்படும் போலியான நியூஸ் கார்டில் இடம்பெற்ற கனிமொழியின் புகைப்படம் ஆனது திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசிய போது என மார்ச் 22-ம் தேதி கனிமொழியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
இன்று நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஈஸ்வரன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது.#DMK #திமுக #VoteForDMK#TNElections2021 #TNAssemblyElection2021 pic.twitter.com/azVCt3BRPN
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 22, 2021
இதுகுறித்து, திமுக செய்தித்தொடர்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். எங்கள் அழைப்பை எடுக்கவில்லை. அவர்கள் பதில் அளிக்கும் பட்சத்தில் அதையும் இணைக்கிறோம்.
இதேபோல், ” திமுக மகளிரணியுடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன். கனிமொழி பேச்சு ” என 2019 ஜனவரி 7-ம் தேதியிட்ட நியூஸ் 7 தமிழ் நிறுவனத்தின் நியூஸ் கார்டும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நியூஸ் கார்டும் எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ் கார்டே.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சிக்கு வந்த உடன் திமுக மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் என எம்.பி கனிமொழி கூறியதாக பரப்பப்படும் பாலிமர் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.