கர்னல் தியாகராஜனை திமுக ராஜீவ் காந்தி தேச துரோகி எனக் கூறியதாகப் பொய் குற்றச்சாட்டு

பரவிய செய்தி

திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி என்னை தேசதுரோகி என சொல்லியுள்ளார் – கர்னல் தியாகராஜன்

மதிப்பீடு

விளக்கம்

கடந்த 23ம் தேதி கோயம்புத்தூர் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஜமேஷா முபீன் என்ற நபர் இறந்தார். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வந்த நிலையில், அவ்வழக்கினை கடந்த 26ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. எனவே இந்த சம்பவம் குறித்து தனிப்படை காவல் துறையினர் நடத்திய வழக்கு விசாரணை கோப்புகள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கோவை சம்பவத்தினை காவல் துறையினர் விரைவாக விசாரித்ததை பாராட்டுகிறேன். ஆனால் இந்த வழக்கினை என்.ஐ.ஏ-வுக்கு மாற்ற ஏன் நான்கு நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள்? ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்ற விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.

ஆளுநர் இவ்வாறு பேசியது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சி சொல்லதிகாரம் என்ற விவாத நிகழ்ச்சியினை நடத்தியது. “கோவை கார் வெடிப்பு – ஆளுநரின் விமர்சனம் சரியா, மிகையா?” என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த விவாத நிகழ்ச்சியில் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி, விமர்சகர் கர்னல் தியாகராஜன், விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி முதலானோர் கலந்து கொண்டனர்.

உண்மை என்ன ?

அந்நிகழ்ச்சியில் கர்னல் தியாகராஜன் பேசுகையில், 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் மாநிலம் தாண்டிய மற்ற நாடுகளின் விஷயம் இருப்பதினால் NIA-யிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது என குறிப்பிடுகிறார். இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைக்கு பிறகு டி.ஜி.பி அளித்த அறிக்கையில், ஜமேஷா முபீன் வீட்டிலிருந்து லோவ் இன்டன்சிட்டி பொருட்கள் கையகப்படுத்தப்பட்டதாக கூறினார்.

ஆனால், 27ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் FIR போடப்படுகிறது. அதில், PETN மற்றும் நைட்ரோ கிளிசரின் என்ற பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த வெடி பொருட்கள். 23ம் தேதி மாலை 109 பொருட்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் PETN மற்றும் நைட்ரோ கிளிசரின் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன. இப்படி இருக்கையில் காவல் துறையினர் லோவ் இன்டன்சிட்டி பொருட்கள் கிடைத்ததாக எப்படி குறிப்பிட்டனர் என தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார்.

அப்போது ராஜீவ் காந்தி குறிக்கிட்டு, புலனாய்வு நடைபெறும் போது ஊடகத்திடம் அனைத்தையும் சொல்ல கூடாது என்பது சட்டம். நீங்கள் கர்னலாக இருந்துள்ளீர்கள். உங்களது ராணுவ நடவடிக்கைகளை வெளிப்படையாக சொல்லுவீர்களா? அப்படி சொன்னால் அதன் பெயர் தேச துரோகம். நீங்கள் தேச துரோகி என பேசினார்.

ராஜீவ் காந்தி ராணுவ வீரரை தேச துரோகி என பேசிவிட்டார் என்று கூறி ஸ்ரீராம் சேஷாத்ரி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முற்பட்டார். அதற்கு கர்னல் தியாகராஜனும், ராஜீவ் காந்தி என்னை தேச துரோகி என கூறிவிட்டதாக கூறுகிறார்.

அப்போதும் ராஜீவ் காந்தி தனது கருத்தினை தெளிவுபடுத்த ‘நீங்கள் ராணுவ ரகசியங்களை சொன்னால் தேச துரோகிதான்’ என விளக்குகிறார்.

ராஜீவ் காந்தி ராணுவ நடவடிக்கைகளை வெளியில் சொன்னால் தேச துரோகம் என பொதுவாக பேசியதை கர்னல் தியாகராஜனை குறிப்பிட்டு பேசியதாக திரித்து குறியுள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி கர்னல் தியாகராஜனை தேச துரோகி என பேசியதாக ஸ்ரீராம் சேஷாத்ரி மற்றும் தியாகராஜன் கூறியது உண்மையல்ல என அறிய முடிகிறது.

ராணுவ நடவடிக்கைகளை வெளியில் சொல்வீர்களா? அப்படி சொன்னால் அது தேச துரோகம், நீங்கள் தேச துரோகி என ராஜீவ் காந்தி பொதுவாக பேசியதை தியாகராஜனை குறிப்பிட்டதாக பொய்யாக பேசியுள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader