திமுக ஆட்சியில் ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு ரூ.7 லட்சம் பேரம் எனப் பரப்பப்படும் பழைய செய்தி !
பரவிய செய்தி
ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம்?. இதுதாண்டா உண்மையான நியூஸ். விடியல் தராங்க !தராங்க ! ன்னு சொல்லி சொந்த கட்சிக்காரனே ஓடுற அளவுக்கு தராங்க.
மதிப்பீடு
விளக்கம்
ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் என ஓய்வுபெற்ற அதிகாரிகள் புகார் தெரிவித்து உள்ளதாக வெளியான சன் நியூஸ் கார்டு ஒன்றை திமுக அரசை விமர்சித்து பாஜக ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த நியூஸ் கார்டில், ” ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் ? தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி எழுத்தர், ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லஞ்ச பேரம் நடப்பதாக ஓய்வுபெற்ற அதிகாரிகள் புகார்! ஒவ்வொரு வேலைக்கும் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டு முக்கியப்புள்ளி பேசிய ஆடியோ, இணைப்பதிவாளர்கள் வசம் இருப்பதாக தகவல்! ” என இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் சன் நியூஸ் கார்டில் எந்த தேதியில் செய்தி வெளியானது என்பது இடம்பெறவில்லை. ஆகையால், ” ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் ” என்ற வாக்கியத்தை கொண்டு தேடுகையில், அந்த சன் நியூஸ் கார்டு கடந்த 2021 ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருந்தது என்பதை அறிய முடிந்தது.
” ரேசன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு லட்சக்கணக்கில் பேரம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ” என 2021 ஜனவரி 17ம் தேதி தினகரன் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
2021ம் ஆண்டு ஜனவரியில் ஆட்சியில் இருந்தது அதிமுக. அப்போது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக வெளியான நியூஸ் காரில் வருடத்தை மட்டும் நீக்கி விட்டது தற்போது நடந்தது போல் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை செய்தியாக வெளியிட்ட தினமலர் !
மேலும் படிக்க : திமுக அரசு மூதாட்டிக்கு உதவித் தொகையை நிறுத்தியதாக பழைய செய்தியை பரப்பிய சவுக்கு சங்கர் !
இதற்கு முன்பாக, கடந்த அதிமுக ஆட்சியில் வெளியான மூதாட்டி உதவித் தொகை செய்தியை சவுக்கு சங்கரும், 2021 ஜனவரியில் வெளியான கரும்புடன் மது வாங்கும் படத்தை தினமலரும் தற்போது நிகழ்ந்தது போல் பரப்பி இருந்தனர். அது குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் எனப் பரப்பப்படும் சன் நியூஸ் கார்டு சமீபத்தில் வெளியானது அல்ல, கடந்த 2021 ஜனவரி வெளியானது என்பதை அறிய முடிகிறது.