திமுக ஆட்சியில் பிராமணர்களைத் தூய்மை பணியாளர்களாகச் சித்தரிப்பு எனப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
திராவிட மாடல் ஆட்சி ஈராண்டின் சாதனை இதுதான்.பிராமணர் சமுதாய சங்கங்களின் பார்வைக்கு.
மதிப்பீடு
விளக்கம்
இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் ‘மலக்குழி மரணங்க’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றினை வாசித்தார். அக்கவிதையில் ராமர், சீதை, அனுமன் என்ற இராமாயணத்தில் இடம்பெறும் பெயர்கள் மலக்குழியை சுத்தம் செய்வது போல் இடம்பெற்றிருந்தது.
வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு!
அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தனர் கிடைக்காமல்,
அயோத்தி சென்று ராமனை கூட்டி வந்தேன்…
-தோழர். விடுதலை சிகப்பி~மொத்த ராமாயணமும் க்ளோஸ் 🔥
pic.twitter.com/a1vqvE62Dw#StandWith_ViduthalaiSigappi
— சத்யா (@Sathyam60264836) May 9, 2023
இக்கவிதை இந்து மத கடவுள்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது என பாரத் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி காவல் துறையில் புகார் அளித்தனர். இதனால் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருந்த நிலையில், விடுதலை சிகப்பிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் அகில உலக ஆன்மீக இந்துமத கட்சித் தலைவர் ஜெயம் எஸ்.கே கோபி வீடியோ ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் “திராவிட மாடல் ஆட்சி ஈராண்டின் சாதனை இதுதான். பிராமணர் சமுதாய சங்கங்களின் பார்வைக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பிராமண சாதியைச் சேர்ந்த இருவர் தூய்மைப்பணி மேற்கொள்வது போன்றும் அவர்கள் சாதிய தீண்டாமைக்கு உள்ளாவது போன்றும் காண்பிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
விடுதலை சிகப்பி மீது வழக்கு தொடரப்பட்ட போது அவருக்கு ஆதரவாகவும், கருத்துச் சுதந்திரம் குறித்தும் பிராமணர் சாதியைச் சேர்ந்தவர்கள் மலக்குழியைச் சுத்தம் செய்வது போன்றும், தூய்மைப் பணியில் ஈடுபடுவது போன்றும் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
தற்போது கோபி பகிர்ந்த வீடியோ முதற்கொண்டு இது போன்ற அனைத்து வீடியோக்களிலும் கரப்பான்பூச்சி என்ற லோகோ இருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு யூடியூப் பக்கத்தில் தேடினோம்.
‘கரப்பான்பூச்சி’ என்னும் யூடியூப் பக்கத்தில் பிராமணர்கள் தூய்மைப் பணி செய்வது போன்ற வீடியோ 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த யூடியூப் பக்கத்தின் முதல் வீடியோ இதுதான்.
அதே போல், 2018ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி பிராமண சாதியினர் மலக்குழியைச் சுத்தம் செய்வது போன்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் சுத்தம் செய்யும் போது, ‘ஏன் மலக்குழியில் இறங்குகிறீர்கள்? உங்களுக்குச் சுயமரியாதையுடன் வாழ ஆசை இல்லையா’ எனப் பெண் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு பிராமண தூய்மை பணியாளர், “எங்களுக்கும் சுயமரியாதையுடன் வாழ ஆசை இல்லையா என்ன? அதற்கு நாங்கள் மட்டும் மனசு வைத்தால் போதாது, நீங்களும் மனசு வைக்க வேண்டும். உங்கள் வீடுகளுக்கு எங்கள் ஆட்கள் வந்தால் தண்ணீர் ஊற்றிக் கழுவு விடுகிறீர்கள். எங்கள் சாதியினருக்கு வீடு வாடகைக்கு அளிக்கப்படுவதில்லை” என பல்வேறு விஷயங்களைக் கூறுகிறார்.
அவர்களது வீடியோவின் தொடக்கத்தில் “கரப்பான் பூச்சியில் வரும் கதைகள் யாவும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் கதைகள் அல்ல., ஒடுக்கப்படும் சமூகத்தின் வலிகளை உணரவைக்கவே இக்கதைகள் யாவும் எடுக்கப்படுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும், தீண்டாமையின் கொடுமைகளையும் புரிந்து கொள்ளவும், உணரவும் கற்பனையாக இந்த வீடியோ 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது எடுக்கப்பட்டது எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் பிராமணர்களைத் தூய்மை பணியாளர்களாகச் சித்தரித்து வீடியோ எடுக்கப்பட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவ்வீடியோ 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.