திமுக ஆட்சியில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள வீல் சேர் எனப் பரவும் பழைய படம் !

பரவிய செய்தி
ஆமாம்மா.. எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இணையா திருநெல்வேலி ஆஸ்பத்திரியும் இருக்குதுன்னு ஊருக்குள்ளே பேசிக்குறாங்க..Facebook link
மதிப்பீடு
விளக்கம்
திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் உள்ள பழைய வீல் சேரில் உடைந்த பிளாஸ்டிக் நாற்காலி வைக்கப்பட்டு இருப்பது போன்று இடம்பெற்றுள்ளது.
உண்மை என்ன ?
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள சக்கர நாற்காலி எனப் பரவக் கூடிய புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடினோம். இதே புகைப்படத்தினை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி ‘ஆதிசேஷன்’ என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “திராவிட, மாடல் வீல் சேர். ஈவேரா மட்டும் இல்லேன்னா ??? தரையில தான் உக்காந்திருக்கணும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையின் உள்ள சக்கர நாற்காலி இவ்வாறு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொண்டு அப்புகைப்படத்தைப் பற்றி இணையத்தில் தேடியதில், 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி ‘நண்பன் தாசன்’ என்னும் பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
அதில், “திருநல்வேலி அரசு மருத்துவமனை s4 வார்டில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல் செயர் அருமை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்தது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்த சக்கர நாற்காலியின் புகைப்படம் எந்த மருத்துவமனையில், எப்போது எடுக்கப்பட்டது என எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் 2017ம் ஆண்டு முதலே இப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் இருந்து இது தற்போது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் படிக்கட்டு இல்லாமல் இயங்கும் அரசுப் பேருந்து என பாஜகவினர் பரப்பும் 2018ல் எடுத்த வீடியோ !
இதேபோன்று அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட அரசு பேருந்து படங்களை தற்போது எடுக்கப்பட்டது போல சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். அதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடரன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : 2018ல் உடைந்த அரசு பேருந்து படிக்கட்டு படத்தை திமுக ஆட்சி எனப் பரப்பும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ !
முடிவு :
நம் தேடலில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள சக்கர நாற்காலி எனப் பரவும் படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல. இந்த புகைப்படம் கடந்த 2017ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைக் காண முடிகிறது.