தமிழக அரசு பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
திமுக தேர்தல் அறிக்கை 2021 வெளியிட்ட போது இருந்த வரியை விட மாநில அரசு பெட்ரோலுக்கு 40 பைசா குறைவாகவும், டீசலுக்கு ரூ.1.90 கூடுதலாகவும் வசூலிக்கிறது.மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.5.0 குறைவாகவும், டீசலுக்கு ரூ.10 குறைவாகவும் வசூலிக்கிறது. ஆக, மாநில அரசு வரியை கூட்டியுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியதை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்பான விவாதம் துவங்கியது.
இந்நிலையில், பாஜக ஆதரவாளரான செல்வகுமார் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” டெக்னிக்கலாக மக்களை ஏமாற்றுவது எப்படி ? ரூ3.0 குறைத்துவிட்டு நவம்பரில் மத்திய அரசு ரூ.5.0 குறைத்த பிறகு பெட்ரோலுக்கு ரூ1.08ம் டீசலுக்கு ரூ0.94ம் ஏற்றி விட்டது கோபலபுர குடும்ப அரசு. ஆக, மாநில அரசுக்கு பெட்ரோல் டீசல் முலம் கூடுதல் வருவாய் ” எனப் பதிவிட்டு இருந்தார்.
மற்றொரு ட்வீட் பதிவில், ” திமுக தேர்தல் அறிக்கை 2021 வெளியிட்ட போது இருந்த வரியை விட மாநில அரசு பெட்ரோலுக்கு 40 பைசா குறைவாகவும், டீசலுக்கு ரூ.1.90 கூடுதலாகவும் வசூலிக்கிறது. மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.5.0 குறைவாகவும், டீசலுக்கு ரூ.10 குறைவாகவும் வசூலிக்கிறது. ஆக, மாநில அரசு வரியை கூட்டியுள்ளது ” என்றும் பதிவிட்டு இருக்கிறார்.
இதையடுத்து, திமுக தலைமையிலான தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
ஒன்றிய அரசு கடந்த நவம்பரில் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் என கலால் வரியை குறைத்து இருந்தது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.27.90 ரூபாயும், டீசலுக்கு 21.80 ரூபாயும் என கலால் வரி(செஸ் உட்பட) விதிக்கிறது. இதன்பின்னர், பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு உயர்த்தி இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல்.
பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை அதிகரிக்கும் போது, அடிப்படை விலை மற்றும் ஒன்றிய அரசின் வரி ஆகியவற்றுடன் வரும் விலையின் மீது மாநில அரசு விதிக்கும் வரி சதவீதம் கொண்டு நிர்ணயிக்கும் விலையே விற்பனைக்கு வருகிறது. ஒவ்வொரு மாநில அரசும் குறிப்பிட்ட சதவீதத்திற்கு வாட் வரியை விதிக்கின்றன.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், தமிழக அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 3ரூபாய் குறைத்த காரணத்தினால், வாட் வரியை 15%+13.02ரூ என்பதில் இருந்து 13%+11.52 ரூபாய் என மாற்றி அரசாணை வெளியிட்டது. இதன் பிறகு தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யவில்லை.
கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை உயரும். இப்படி அடிப்படை விலையில் மாற்றம் ஏற்படுகையில் அதன் மீது விதிக்கப்படும் வாட் வரியின் சதவீதத்தின் காரணமாக விலை ஏற்ற, இறக்கம் ஏற்படுகிறது. இதன் பொருள் மாநில அரசு வாட் வரியை உயர்த்தியது என்பது அல்ல. வாட் வரியின் சதவீதம் காரணமாக விலையில் வேறுபாடு இருக்கும்.
அதிமுக அரசு, 2017-ல் பெட்ரோல் மீதிருந்த வாட் வரியை 25%-ல் இருந்து 34% ஆகவும், டீசலுக்கு 21.43%-ல் இருந்து 25% ஆகவும் அதிகரித்து இருந்தது. அதன்பின்னர், 2020-ல் மீண்டும் வாட் வரியை பெட்ரோலுக்கு 34% என்பதை 15%+13.02ரூ என்றும், டீசலுக்கு 25% என்பதை 11%+9.62ரூ என்றும் மாற்றி அரசாணை வெளியிட்டது.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13%+11.52ரூ மற்றும் டீசலுக்கு 11%+9.62ரூ வாட் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சதவீதத்தின் காரணமாகவே விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவு :
நம் தேடலில், திமுக தலைமையிலான தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பதாக பரப்பும் தகவல் தவறானது. தற்போது வாட் வரி உயர்த்தப்படவில்லை. பெட்ரோல், டீசலின் அடிப்படை விலையில் மாற்றம் ஏற்படும் போது மாநில அரசின் வாட் வரி தொகையில் மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.