சமூகத்தின் துணையால் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றும் Dr.கிருஷ்ணவேணி.

பரவிய செய்தி

0.5 மதிப்பெண்ணில் அரசு மருத்துவக் கல்லூரி சீட்டை இழந்து, மருத்துவ கனவே கலைந்து போன நேரத்தில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு கடிதம் எழுதிய பிறகு எனக்கு உதவினார்கள். என்னுடைய 12 வயதில் பெற்றோரை இழந்தேன். தற்பொழுதுடாக்டர் கிருஷ்ணவேணி இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

மதிப்பீடு

விளக்கம்

ஏழ்மையின் காரணமாக தகுந்த கல்வி கிடைக்காததால் பலரின் வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் போய்விடுகிறது. எனினும், வெகு சிலருக்கு சமூகத்தில் உள்ளவர்களின் உதவியால் வாழ்வில் கல்வியும், முன்னேற்றமும் சாத்தியமாகிறது. இப்படி துயரங்களும், வலிகளும் கடந்து வாழ்வில் சாதித்தவர்களின் பேச்சும், கதையும் பலருக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் அமையும். அப்படியொருவர்தான் மருத்துவர் கிருஷ்ணவேணி.

Advertisement

கரூர் மாவட்டத்தில் பிறந்த கிருஷ்ணவேணி தன்னுடைய 12-வது வயதில் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரையுமே இழந்து விட்டார். கிருஷ்ணவேணியின் பெற்றோர் இறந்த பிறகு அவரின் உடன் பிறந்த அண்ணன் தான் அவரை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்து உள்ளார். முதலில் அரசு பள்ளியில் படித்து வந்த கிருஷ்ணவேணி 10-ம் வகுப்பில் பள்ளிலேயே இரண்டாம் இடம் பிடித்தார்.

இதையடுத்து, அவரின் ஆசிரியர் ஒருவரின் உதவியால் தனியார் பள்ளியொன்றில் படித்து வந்த கிருஷ்ணவேணி பொதுத்தேர்வில் 1144 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம் படிக்க 197 கட் ஆஃப் மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் கூட 0.5 மதிப்பெண்ணில் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது.

இதனால் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவு கலைந்து போனதாக நினைத்தவருக்கு நடிகர் சூர்யா நடத்தி வரும் ” அகரம் அறக்கட்டளை ” பற்றி தெரிய வந்தது. உடனே அகரம் அறக்கட்டளைக்கு கடிதம் எழுதி இருந்தார். கடிதத்தின் பயனாக அகரம் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் நேரில் வந்து அவரின் குடும்பத்தை சந்தித்து உதவி செய்ய ஆரம்பித்தனர்.

அகரம் அளித்த உதவி மட்டுமல்லாமல் உடன் படித்த நண்பர்கள், யாரென்றே தெரியாதவர்களின் உதவியின் மூலம் கிருஷ்ணவேணி தன்னுடைய மருத்துவ கனவில் சாதித்தார். இந்திய ராணுவத்தில் மருத்துவர் வேலைக்கு விண்ணப்பித்தவருக்கு இறுதியில் ராணுவத்தில் சேவையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. 26 வயதான கிருஷ்ணவேணி தற்பொழுது 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

சமூகத்தால் தனக்கு எப்படி உதவி கிடைத்ததோ அதேபோல் உதவி தேவைபடும் குழந்தைகளுக்கும் தன்னால் முடிந்த உதவியை அளித்து வருவதாகவும், கிராமங்களில் விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச மருத்துவர் சிகிச்சை போன்றவற்றை செய்து வருவதாகவும் விகடனுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர் கிருஷ்ணவேணி தெரிவித்து இருக்கிறார். சிறு வயது முதல் அவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது அவரின் அண்ணன் எனக் கூறி இருக்கிறார்.

Advertisement

Facebook link | archived link  

2019 டிசம்பர் மாதத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற 400 தமிழக லாரி ஓட்டுனர்கள் 15 நாட்களாக தங்கிய நிலையில், அவர்களுக்கு உணவு பொருளும், மருத்துவ உதவியும் தேவை என செய்திகளில் வெளியானதை அடுத்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் அகரம் ஸ்டூடன்ட் கிருஷ்ணவேணி உதவியது குறித்து அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : ஏழை மாணவர்களின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை எண்கள் !

வறுமையால் மேற்கொண்டு உயர் கல்வியை பெற முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை உதவி வருவது குறித்தும், அப்படியான மாணவர்களை தெரியப்படுத்த அகரம் அறக்கட்டளைக்கு தொடர்பு கொள்ளவும் என நடிகர் சூர்யா வெளியிட்ட ட்வீட் குறித்தும் யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

தன் வாழ்வில் சிறு வயதில் இருந்து பல துயரங்களையும், தடைகளையும் கடந்து சமூகத்தில் இருக்கும் சிலரின் துணையால் மருத்துவ படிப்பை முடித்து, தற்பொழுது இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் கிருஷ்ணவேணி போன்ற பலரும் தங்கள் வாழ்வில் சாதிக்க வேண்டியதே மாற்றத்திற்கான படியாகும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button