This article is from Aug 03, 2020

இளம் மருத்துவர் ஆயிஷா கொரோனாவால் இறந்ததாக வதந்தி கதை!

பரவிய செய்தி

ஆழ்ந்த இரங்கள்.. வெண்டிலேட்டர் வைக்க போகின்றார்கள் என்னையும் என் சிரிப்பையும் மறந்து விடாதீர்கள். கொரோனாவால் உயரிழந்த இளம் மருத்துவர் ஆஷாவின் கடைசி பதிவு அபாயகரமான இந்த கொரோனா வைரஸ் குறித்து அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள் டாக்டர் ஆஷா.

மதிப்பீடு

விளக்கம்

இளம் மருத்துவர் ஆயிஷா என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனக்கு வெண்டிலேட்டர் வைக்க போவதாகவும், தனது சிரிப்பை மறக்க வேண்டாம் என கூறியதாக ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்ததாக ஓர் தவறான சோகக் கதை இந்திய ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகியது. தற்போது பிற சமூக வலைதளங்களில் பல மொழிகளில் வைரலாகி வருகிறது. இதை உண்மை என நினைத்து பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா போராளியாக சித்தரிக்கப்பட்ட இளம் மருத்துவரின் கதை பதிவிட்ட  Aisha_must_sayz எனும் ட்விட்டர் பக்கம் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. எனினும், அந்த ட்விட்டர் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷார்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Pirated Daactarni எனும் ட்விட்ட பக்கத்தில் ஸ்க்ரீன்ஷார்ட்கள் வெளியாகி உள்ளது. ஆயிஷா ட்விட்டர் பக்கத்தில் தென் ஆப்ரிக்கா என முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சிரிப்புடன் இருக்கும் இளம் பெண்ணின் புகைப்படத்தில் இருக்கும் தலையணையில் இடம்பெற்ற லோகோ ஆனது தெலங்கானாவில் உள்ள மருத்துவமனையுடன் ஒத்துப் போகிறது. இப்புகைப்படம் கடந்த சில வருடங்களாக இணையத்தில் உலாவி வருகிறது.

இளம் மருத்துவருக்கு வெண்டிலேட்டர் வைக்கப்பட்டதாக உடன் இணைக்கப்பட்ட புகைப்படம் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே சில இணையதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. consultdranderson எனும் இணையதளத்தில் மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்பாக என இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவான கருத்துக்கள் யாவும் ஒரு மருத்துவருடன் தொடர்புடையதாக இல்லை. இதை அறிந்த பின்னர் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்ப, மருத்துவர் ஆயிஷா உடைய சகோதரி எழுதுவதாகக் கூறி சில பதிவுகள் அப்பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இறுதியாக ட்விட்டர் பக்கத்தை நீக்குவதாக பதிவிடப்பட்டுள்ளது.

 

தென் ஆப்ரிக்கா நாட்டைக் குறிப்பிட்டு இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் இணையத்தில் கிடைக்கும் புகைப்படங்களை வைத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் வைக்க போவதாக வெளியிட்ட பொய்யான கதை இந்திய ட்விட்டர் தளத்தில் உண்மை என நினைத்து ட்ரெண்ட் ஆகி உள்ளது. கொரோனா வைரசால் பல லட்சம் பேர் பாதிக்கப்படும், பலர் உயிரிழந்து வரும் நிலையில் போலியான கதைகள் மக்களிடம் வைரலாகிறது வேதனை அளிக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்து பல வதந்திகள், கற்பனை கதைகள், திட்டமிட்ட பொய்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அது குறித்து நாம் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வருகிறோம். சமூக வலைதளத்தில் ஓர் தகவலை பகிர்வதற்கு முன்பாக அப்பதிவு உண்மையா என சிந்திக்க வேண்டியது அவசியம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader