மன்மோகன்சிங் பெயரில் Scholarship.. எந்த பல்கலைக்கழகத்தில் தெரியுமா ?

பரவிய செய்தி

800 வருட பழமையான ஆக்ஸ்வர்ட் பல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்குவதை தொடங்கி உள்ளனர். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளும் தருணம் இது. ஆனால், இந்திய ஊடகங்களில் இத்தகவல் பற்றி எந்தவொரு செய்தியும் வெளியிடவில்லை. ஆகவே, அனைத்து இந்தியர்களுக்கும் இந்த செய்தி சேரும் வரை பகிருங்கள்..!!!

மதிப்பீடு

சுருக்கம்

2007 ஆம் ஆண்டில் இருந்து முதுகலை பட்டம் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மன்மோகன்சிங் பெயரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டிற்கான உதவித்தொகை பெறுவது பற்றி பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

1950 ஆம் ஆண்டுகளில்(1956-57) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவு பட்டத்தில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் அவர்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தனது 800 ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கும் தருணத்தில் மன்மோகன்சிங் அவர்களை கௌரவிக்க அப்பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் St. john college-ல் டாக்டர்.மன்மோகன்சிங் பெயரில்முதுகலைப் பட்டம் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மூன்று கல்வி உதவித் தொகை வழங்குவதை அறிமுகம் செய்வதாக 2007-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

” 2010 ஆம் ஆண்டில் இருந்து டாக்டர்.மன்மோகன்சிங் பெயரில் இளங்கலைப் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 கல்லூரியின் எந்த கல்லூரியிலும் எந்தவொரு பாடப் பிரிவிலும் பயில கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை திட்டத்தில் அப்பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கான அனைத்து உதவிகளும் இதன் கீழ் வழங்கப்படும் “.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 200-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2010-ல் இந்திய மாணவர்களுக்கு உதவ 15 லட்சம் பவுண்ட்ஸ் அளவிற்கு உதவித் தொகை அமைக்கப்பட்டது. இந்த திட்டம் பற்றி அறிவித்தது பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலிசன் ரிச்சர்ட்.

இந்திய மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களுக்கான கல்வி உதவித் தொகை மன்மோகன்சிங் அவர்களின் பெயரில் வழங்குவது இந்தியா மற்றும் கேம்பிரிட்ஜ் இடையே உள்ள உறவின் ஆழத்திற்கான உதாரணம் என்றார் ரிச்சர்ட்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் பெயரில் கல்வி உதவி தொகை வழங்குவது அவர் பட்டம் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தான் ஆக்ஸ்வர்ட் பல்கலைக்கழகத்தில் அல்ல.

இத்திட்டம் தற்பொழுது தொடங்கவில்லை 2007 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்திய ஊடகங்களிலும் இதை பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button