தமிழ்நாட்டின் சாலை எனத் தவறானப் படத்தை பரப்பும் முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி..!

பரவிய செய்தி
மழை பெய்தால் ரோட்ல வழுக்கி பாத்திருப்பீங்க. ஆனா ஒரு ரோடே வழுக்கிட்டு போய். பாத்திருக்கீங்களா – K C பழனிசாமி, முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
மழை பெய்தால், ரோட்டில் தான் வழுக்கி விழுவார்கள். ஆனால் இங்கு ஒரு ரோடே அடியோடு பெயர்ந்து போய் விழுந்திருக்கிறது. இது தான் புதிய திராவிட மாடல் ஆட்சியின் ரோடு எனக் குறிப்பிட்டு மழையில் சாலை உடைந்து இருக்கும் புகைப்படத்தினை முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிசாமி உட்பட பலரும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
மழை பெய்தால்
ரோட்ல வழுக்கி
பாத்திருப்பீங்கஆனா ஒரு ரோடே
வழுக்கிட்டு போய். பாத்திருக்கீங்களா ….திராவிடமாடல் ரோடு. pic.twitter.com/ClUaiyl6K0
— கைப்புள்ள (@kaippulla123) May 25, 2023
மழை பெய்தால் ரோட்ல வழுக்கி பார்த்திருப்பீங்க…
ஆனா ஒரு ரோடே வழுக்கிட்டு போய்
பார்த்திருக்கீங்களா…இதுவும் புதிய திராவிட மாடல் ரோடு தான்..
😝😜🤣😃😀😂 pic.twitter.com/2wuPXdpsM8— அஹம் ப்ரம்மாஸ்மி அகோரி 🚩🚩🚩🇮🇳🔥🔥🔥 (@l6Uu2YIKmMzZujj) May 24, 2023
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது.
மேலும் 2020 மே 13 அன்று பொன்னை நாதன் என்னும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் எந்த பகுதியை சேர்ந்த ரோடு என்று குறிப்பிடாமல் “ரோடு லேசா மழையில் நனைந்து விட்டது அதான் வெயிலில் காயபோட்டுள்ளோம்…” என அப்போதைய அதிமுக அரசை கிண்டல் செய்து பதிவு செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.
ரோடு லேசா மழைல நனஞ்சிடுத்து அதான் வெயிலில் காயபோட்டுள்ளோம்… pic.twitter.com/TDwJqQwSuP
— பொன்னை நாதன் (@Vihashini13) May 13, 2020
அதே போன்று 2020 மே 23 அன்று Rezwan என்னும் ட்விட்டர் பக்கத்திலும் இதே புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில், “வங்கதேசத்தில் ஏற்பட்ட அம்பன் சூறாவளி காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளன. இதற்கு காரணம் சூறாவளி காற்றின் சக்தியா அல்லது மோசமான கட்டுமானமா என்று தெரியவில்லை?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Cyclone #Amphan ripped off road carpeting in rural Bangladesh. Is it the power of the winds or poor construction to blame? pic.twitter.com/HMm3YzLIAw
— Rezwan (@rezwan) May 23, 2020
இதன் உண்மையான புகைப்படம் குறித்தும், இது எந்த பகுதியை சேர்ந்தது என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்ததில், தற்போது வைரலாகும் இந்தப் புகைப்படம், மலேசியாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் பக்கமான LANDO Zawawi – Brotherhood Malaysia என்னும் பக்கத்தில் 2019 டிசம்பர் 26 அன்றும், Viral Cerita Panas Malaysia என்னும் பக்கத்தில் 2019 டிசம்பர் 27 அன்றும் பதிவு செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
மேலும் இப்புகைப்படம் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. 2019-ல் மலேசியாவை சேர்ந்தது என்றும், 2020-ல் வங்கதேசத்தை சேர்ந்தது என்றும் பரவி வந்துள்ளதையும் காண முடிகிறது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் தவறான படம் !
இதற்கு முன்பும் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை என்று 2020ல் இருந்தே பரவி வந்த புகைப்படம் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சியில் போடப்பட்ட சாலை என சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல. இது 2019ல் இருந்தே மலேசியாவைக் குறிப்பிட்டு பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.