திராவிட மொழிகளில் தொன்மையான தமிழ் மொழி !

பரவிய செய்தி
திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது, அதில் தமிழ் மொழி தொன்மையானது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 80 திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானவை. அதில், தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என்ற தகவல் மொழியியல் சார்ந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
விளக்கம்
ஜெர்மனியில் உள்ள “ மேக்ஸ் பிளாங் கல்வி நிறுவனத்தின் அறிவியல்-மானுடவியல் வரலாற்றுத்துறை ” மற்றும் இந்தியாவின் டேராடூனில் உள்ள “ இந்தியன் வைல்ட்லைப் கல்வி நிறுவனம் ” இணைந்து திராவிட மொழிக் குடும்பம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை “ ராயல் சொசைட்டி ஓபன் சைன்ஸ் ” என்ற பத்திரிகையில் மார்ச் 21-ம் தேதி வெளியாகியது.
அதில், திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு சர்வதேச குழுவின் “ புதிய மொழியியல் பகுப்பாய்வை ” மையமாகக் கொண்டும், திராவிட மொழிகளில் இருந்து பிரிந்த கிளை மொழிகளின் தரவுகளைக் கொண்டு நடத்திய மேக்ஸ் பிளாங் கல்வி நிறுவனத்தின் அறிவியல்-மானுடவியல் வரலாற்றுத்துறையின் ஆராய்ச்சியின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.
திராவிட மொழிக் குடும்பம்:
கிழக்கில் வங்கதேசம் முதல் மேற்கில் ஆப்கானிஸ்தான் வரை உள்ள தெற்காசிய நிலப்பரப்பானது குறைந்தது 600 மொழிகளுக்கு தாயமாக உள்ளது. இந்த மொழிகள் அனைத்தும் திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உள்ளடங்கிய 6 மொழிக் குடும்பங்களை சேர்ந்தவை.
இவற்றில், 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிகள் தென்னிந்தியா, மத்திய இந்தியா மற்றும் இந்திய அண்டை நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஏறக்குறைய 22 கோடி மக்களால் பேசப்படுகிறது. திராவிட மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளே அதிகளவில் பேசப்படுகிறது. இவற்றின் இலக்கியங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவானவை. எனினும், அதில் தமிழ் இலக்கியங்களின் பங்கு இன்னும் அதிகம்.
தமிழ் மொழி :
உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கருதப்படுகிறது. ஆனால், தமிழ் மொழியானது சமஸ்கிருதம் போன்று சிதையாமல், பழங்காலத்தில் இருந்த கல்வெட்டுகள், இலக்கியங்கள் , சமயம் சாராத மற்றும் சமயம் சார்ந்த எழுத்துக்கள், பாடல்கள் அனைத்தும் இன்றைய காலக்கட்டத்திலும் தமிழ் மொழியில் காணப்படுகிறது.
“ திராவிட மொழிகளின் வரலாறு, ஐரோப்பிய மற்றும் ஆசியாவை ஒன்றிணைத்த “ ஈரோசியா ” வரலாறு குறித்து அறிந்து கொள்ள முக்கிய பங்கு வகிக்கும். தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் மற்ற மொழிகளின் மீது மிகுந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று ஆய்வில் கூறியுள்ளனர். எனவே, திராவிட மொழிகள் குறித்த முழுமையான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
திராவிட மொழிகள் எங்கு தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை, அதேபோல் எப்போது உருவானது என்று உறுதியாக தெரியவில்லை. எனினும், 3,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைவதற்கு முன்பே திராவிடர்கள் இங்கு பூர்வக்குடியாக வாழ்ந்து வந்துள்ளனர் என்ற கருத்தொற்றுமை ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது. இன்றையக் காலக்கட்டத்தை விட, அக்காலத்தில் திராவிட மொழிகள் மேற்கு திசையில் பரவலாக இருந்திருக்கலாம்.
வலுவான முடிவுகள் :
திராவிட மொழிகள் எங்கு, எப்போது தோன்றின என்ற கேள்விகளுக்கான விடையை கண்டறிய முயற்சித்த போதே, தமிழ் உள்ளிட்ட 20 திராவிட மொழிகளுக்கு இடையேயான வரலாற்று ரீதியான உறவுகள் குறித்த விரிவான ஆராய்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
ஆராய்ச்சியாளர்களின் மேம்பட்ட புள்ளிவிவர முறைகளின் மூலம் திராவிட மொழிகளின் வயது 4000 முதல் 4500ஆண்டுகள் பழமையானது மற்றும் அவற்றின் கிளை மொழிகள் பற்றியும் ஊகித்துள்ளனர். தொல்லியல்துறையின் அனுமானத்துடன் திராவிட மொழியின் வயதானது பொருந்துவதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஆரியர்களின் வருக்கைக்கு முன்பே திராவிட மொழி பேசும் மக்கள் இந்தியாவில் பூர்வக்குடி மக்களாக வாழ்ந்து வந்துள்ளனர் எனும் பல தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்துகள் மெய்யாகும் வகையில் மேக்ஸ் பிளாங் கல்வி நிறுவனத்தின் ஆய்வின் முடிவு அமைந்துள்ளது.
குறிப்பாக திராவிட மொழிகளில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என்றும், தற்காலத்திலும் சிறந்து விளங்குவதாகவும் கூறியுள்ளனர். திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானவை என்றும், அதில் மிகவும் பழமையானது தமிழ் மொழி என்று கூறியிருப்பது தமிழின் தொன்மையை உலகறியச் செய்துள்ளது.