ட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா ?

பரவிய செய்தி
கர்நாடக மாநிலத்தில் குக்கிராமத்தில் பிறந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உலக அளவில் நமது பெருமையை நிலைநாட்டிய 21 வயது இளைஞர் பிரதாப்-ஐ மோடி அரசு DRDO-வில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்து பெருமைபடுத்தியுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
21 வயதான பிரதாப் என்கிற இளைஞனின் சாதனை குறித்த தகவலை நீங்கள் நிச்சயம் படித்திருக்கக்கூடும். ட்ரோன் பாய் என அழைக்கப்படும் பிரதாப் உடைய சாதனைகளை பட்டியலிட்ட நீண்டப் பதிவு சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் வைரலாகி உள்ளது. தற்போது, அந்த இளைஞரை பிரதமர் மோடி பாராட்டியதோடு DRDO-வில் இணைத்து பணியாற்ற வாய்ப்பு அளித்து உள்ளார் என்கிற செய்தி மீண்டும் வைரலாகத் தொடங்கி உள்ளது.
உண்மை என்ன ?
ட்ரோன் பாய் பிரதாப் குறித்து தேடுகையில், கர்நாடகாவின் மாண்டியாவைச் சேர்ந்த 22 வயதான ட்ரோன் விஞ்ஞானி தன்னுடைய ட்ரோன்களை கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு வழங்கியதாக 2019 ஆகஸ்ட் 17-ம் தேதி டெக்கான் ஹெரால்ட் செய்தியில் வெளியாகி இருந்தது. தற்போது வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் இளைஞரே அந்த செய்தியில் வெளியான புகைப்படத்திலும் இருக்கிறார்.
பிரதாப் DRDO (Defence Research and Development Organisation)-ல் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார் எனக் கூறும் தகவல் குறித்து ஆராய்ந்து பார்க்கையில் அவ்வாறான செய்திகள் முன்னணி ஊடகங்களில் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இது குறித்து பிரதாப், ” பிரதமர் மோடியின் பரிந்துரையின்படி DRDO-வில் பணியாற்றுவதாக கூறும் தகவலை தவிர வைரலாகும் பதிவுகளில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியானதே. இன்றுவரை பிரதமர் அல்லது பிரதமர் அலுவலத்தில் இருந்து எந்தவொரு அழைப்பையும் நான் பெறவில்லை. DRDO குறித்து பரவும் தகவல் தவறானது. அந்த அமைப்புடன் நான் பணியாற்றி வருகிறேன், ஆனால் நேரடியாக இல்லை. DRDO-க்காக பணியாற்றி வரும் பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றி வருகிறேன் ” என தி குயின்ட் இணையதளத்திற்கு பதில் அளித்து உள்ளார்.
DRDO-ல் ஆரம்ப நிலையில் இருக்கும் பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக முதுகலைப் பட்டம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதுவரை பிரதாப் முதுகலைப் பட்டம் பெறவில்லை எனக் கூறியுள்ளார்.
ட்ரோன் விஞ்ஞானி பிரதாப் சாதனைகள் குறித்து பரவும் தகவல்களை அவர் மறுக்கவில்லை, ஆனால் DRDO-வில் பணியாற்ற பிரதமர் மோடி வாய்ப்பளித்ததாகக் கூறும் தகவலை மறுத்துவிட்டார். தற்போது வரை பிரதமர் மோடியின் தரப்பில் இருந்து எந்தவொரு அழைப்பும், இமெயிலும் வரவில்லை என்கிறார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.