மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவதில் சென்னை முதலிடம் எனத் தவறான செய்தி வெளியிட்ட நியூஸ் 18 !

பரவிய செய்தி
மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவதில் சென்னை முதலிடம் – வெளியான அதிர்ச்சித் தகவல்Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
“இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துவதில் சென்னை முதலிடம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அதிகமாக இருந்தாலும் போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவது சென்னையை விட குறைவாகவே உள்ளது.
பெங்களூரில் 900 மதுபான கடைகள் இருந்த போதும் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கியவர்களில் ஓராண்டில் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 1200 மதுபான கடைகள் உள்ள மும்பையில் 6 பேரும், 600 மதுபான கடைகள் உள்ள டெல்லியில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. இவற்றுடன் ஒப்பிடுகையில் 800 டாஸ்மாக் கடைகள் உள்ள சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஓராண்டில் 44 ஆக உள்ளது ” என நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஜூன் 9ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரையில், இந்திய அளவிலான நகரங்களில் மதுபோதையில் வாகன ஓட்டிகளால் நிகழும் மரணங்களில் சென்னை முதலிடம் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
உண்மை என்ன ?
இந்தியாவில் மதுபோதையில் நிகழும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தேடுகையில், 2022ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட 2021ல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கை கிடைத்தது.
ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட தரவின்படி, இந்தியாவில் மதுபோதையால் அதிக விபத்துகள் நிகழ்ந்த நகரமாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் 977 விபத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்(பிரக்யாராஜ்) 224, தமிழ்நாட்டின் சென்னை 142, உத்தரப்பிரதேசத்தின் மீரட் 114, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா 55, கர்நாடகாவின் பெங்களூர் 54 என்ற எண்ணிக்கையுடன் வரிசையாக உள்ளன.
மதுபோதையால் நிகழும் வாகன விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில், உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்(பிரக்யாராஜ்) 106 மரணங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, உத்தரப்பிரதேசத்தின் மீரட் 61, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் 44, சென்னை 44 , வாரணாசி (33) எண்ணிக்கையுடன் வரிசையாக உள்ளன.
நியூஸ் 18 தமிழ் செய்தியில், மதுபோதையால் நிகழும் வாகன விபத்துகளால் பெங்களூரில் 19, மும்பையில் 06, டெல்லியில் 01 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறி இருப்பர். அந்த எண்ணிக்கை மேற்காணும் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் கொண்ட அலகாபாத், ஜபல்பூர், மீரட் உள்ளிட்ட நகரங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை.
அதேபோல், மதுபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையை மாநிலம் வாரியாக பார்க்கையில், உத்தரப்பிரதேசம்(2,346), மத்தியப் பிரதேசம்(2,065) , தெலங்கானா (1,487), அசாம்(677), தமிழ்நாடு(336) ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
மாநிலம் வாரியாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையில், உத்தரப்பிரதேசம்(1,284), தெலங்கானா (339), மத்தியப் பிரதேசம்(332), அசாம்(318), ஜார்கண்ட்(223) ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதில், தமிழ்நாடு(95) 8வது இடத்தில் உள்ளது.
ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை 2021ம் ஆண்டு முழுவதிலும் நிகழ்ந்த விபத்துகள் தொடர்பானது. 2021 மே மாதம் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், இந்தியாவில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவதில் சென்னை முதலிடம் என நியூஸ் 18 தமிழ்நாடு, டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி தவறானது. ஒன்றிய அமைச்சகத்தின் தரவின்படி, மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தும் நகரங்களில் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்(பிரக்யாராஜ்) 106 மரணங்களுடன் முதலிடத்தில் உள்ளது என்பதை அறிய முடிகிறது.