சந்தைக்கு வரும் திராட்சை மீது இரசாயனம் பூசப்படுவதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவிய செய்தி

எந்த காய்கறி, பழங்கள் வாங்கினாலும் நன்றாக கழுவி விட்டு சாப்பிடவும் இப்ப எல்லாமே விஷம்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

பால் போன்ற திரவம் நிரப்பப்பட்ட தொட்டியின் உள்ளே ஒருவர் நின்று கொண்டு திராட்சைப் பழங்களை அந்த திரவத்தில் முக்கி எடுக்கக்கூடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் ’பழங்கள் வாங்கினால் நன்றாகக் கழுவிவிட்டுச் சாப்பிடுங்கள் இப்ப எல்லாமே விஷம் தான்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்திரவம் என்ன? திராட்சைப் பழங்கள் எதற்கு அதில் தோய்த்து எடுக்கப்படுகிறது என எந்த விவரமும் அப்பதிவுகளில் இல்லை.

உண்மை என்ன?

பரவக் கூடிய இதே வீடியோ ‘Film Food Fun & Fact’ என்னும் எக்ஸ் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. அதன் கமெண்டில் இது உலர் திராட்சை தயாரிக்கும் முறை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு மேற்கொண்டு தேடினோம். 

உலர் திராட்சை தயாரிப்பது தொடர்பாக ‘FarmTV’ என்னும் யூடியூப் பக்கத்தில் 2014, டிசம்பர் 30ம் தேதி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், அடிபட்ட திராட்சைகளை நீக்கிவிட்டு திராட்சை கொத்துக்களைத் தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு 100 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் எத்தில் ஓலியேட்  (Ethyl Oleate) மற்றும் 2 கி.கி பொட்டாசியம் கார்பனேட் (Potassium Carbonate) கலந்து திராட்சைகளை அத்தண்ணீரில் 3 முதல் 5 நிமிடம் ஊற வைத்து பிறகு உலர வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

உலர் திராட்சை தயாரிப்பது தொடர்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ICAR – Indian Council of Agricultural Research) மற்றும் தேசிய திராட்சை ஆராய்ச்சி மையம் (NRCG – National Research Centre for Grapes) இணைந்து ’தரமான மற்றும் பாதுகாப்பான உலர் திராட்சை உற்பத்தி’ என்கிற தலைப்பில் கையேடு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதிலும், சேதமடைந்த திராட்சைகள் நீக்கி விட்டு தூசி துகள்களை அகற்றச் சுத்தமான தண்ணீரில் 30 – 60 வினாடிகள் கழுவ வேண்டும். பிறகு எத்தில் ஓலியேட் மற்றும் பொட்டாசியம் கார்பனேட் கரைசலுடன் கூடிய நீரில் திராட்சைகளை முக்கி எடுக்க வேண்டும். இது திராட்சைகளிலிருந்து விரைவாக நீர் வெளியேற வழிவகை செய்யும். இது வெவ்வேறு பிராண்டுகளில் சந்தையில் கிடைக்கிறது. பொதுவாக எத்தில் ஓலேட் (1.5%) மற்றும் பொட்டாசியம் கார்பனேட் (2.5%) ஆகியவற்றின் கலவையானது உலர் திராட்சை தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரில் 2 – 6 நிமிடம் திராட்சைகளை நினைக்க வேண்டும். இந்த கரைசலின் pH அளவு 11.0 – 11.5க்கு இடையில் இருக்க வேண்டும். சுமார் 80 முதல் 100 கிலோ திராட்சைகளுக்கு 10 லிட்டர் கரைசல் போதுமானதாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் பிறகு இந்த திராட்சைகள் உலர்த்தப்பட்டு, மீண்டும் அழிவி உலர்த்தி விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இவற்றிலிருந்து இது உலர் திராட்சை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைதான் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், பரவக் கூடிய வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

அதேபோல் மேல் சொன்ன அறிவுறுத்தல்கள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வி பரவக் கூடிய வீடியோவை பார்க்கும் போது எழுகிறது. ஏனென்றால் பொட்டாசியம் கார்பனேட் கரைசல் இருக்கக் கூடிய தொட்டியின் உள்ளேயே ஒருவர் நின்று கொண்டு திராட்சைகளை அதில் முக்கி எடுக்கிறார். அது மட்டுமின்றி மேலே சொன்ன pH அளவு, நேர அளவுகள் பின்பற்றப்படுகிறதா என்றும் தெரியவில்லை. 

முடிவு : 

பால் போன்ற திரவத்தில் திராட்சை முக்கி எடுக்கப்படுவதாகப் பரவும் வீடியோ, உலர் திராட்சை தயாரிக்கப் பின்பற்றப்படும் முறையாகும். அதற்கென சில அறிவுறுத்தல்கள் உள்ளன. பரவக் கூடிய வீடியோவில் அவை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader