இந்து மதத்தை கெளரவிக்க துபாயின் மாவட்டத்திற்கு “ஹிந்த் சிட்டி” எனப் பெயர் சூட்டியதாக பரவும் பொய் !

பரவிய செய்தி
துபாயில் ஒரு மாவட்டம் “ஹிந்த் சிட்டி” என்று பெயரிடப்பட்டுள்ளது! இந்தியா மற்றும் இந்து மதம் உலகுக்கு அளித்த உன்னதமான கொடைகளை நினைவுகூறும் வகையில் இந்த பெயர் மாற்றம் என்கிறார் UAE பிரதமர். மொகல் தோட்டம் பெயர் மாற்றம் குறித்து வயறு எரிந்தவர்களுக்கு இலவசமாக ஜெலூசில்.
மதிப்பீடு
விளக்கம்
2023 ஜனவரி 29ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் பின் ரஷீத் அல் மக்தூம் துபாயில் உள்ள மின்ஹாத் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ” ஹிந்த் சிட்டி “ எனப் பெயரிட்டார். இதையடுத்து, இந்தியா மற்றும் இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் ஹிந்த் சிட்டி எனப் பெயரிடப்பட்டதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் 83.9 சதுர கிமீ ஹிந்த் சிட்டி இந்தியர்கள் பெருந்தன்மையை பாராட்டும் விதமாக அமைய உள்ளது pic.twitter.com/WwyXI5qHFA
— E Chidambaram. (@JaiRam92739628) January 30, 2023
துபாயில் ஒரு மாவட்டம் “ஹிந்த் சிட்டி” என்று பெயரிடப்பட்டுள்ளது! இந்தியா மற்றும் இந்து மதம் உலகுக்கு அளித்த உன்னதமான கொடைகளை நினைவுகூறும் வகையில் இந்த பெயர் மாற்றம் என்கிறார் UAE பிரதமர்.
மொகல் தோட்டம் பெயர் மாற்றம் குறித்து வயறு எரிந்தவர்களுக்கு இலவசமாக ஜெலூசில்😀
… pic.twitter.com/1UhqiwB7sp— Padmanabhan Nagarajan (@ModiArmy2024) January 30, 2023
மேலும், இந்த அறிவிப்பு மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி எனக் கூறியும் பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்களால் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
” ஹிந்த் சிட்டி ” என்பதன் பொருள் குறித்து தேடுகையில், ” Sheikh Mohammed orders Dubai District to be Renamed as Hind City “ எனும் தலைப்பில் வெளியான கல்ஃப் இன்சைடர் செய்தியில், ” ஹிந்த் என்பது அரபு மொழியில் “100 ஒட்டகங்கள் ” என்று பொருள்படும். மேலும், இந்த சொல் அரபு பிராந்தியத்தில் பெண்களுக்கான பொதுவான மற்றும் பழமையான பெயர் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஹிந்த் என்ற சொல் ஆனது துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மனைவியான ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா மக்தூம் பெயரில் இடம்பெற்று இருப்பதாகவும் ” கூறப்பட்டு உள்ளது.
ஜனவரி 30ம் தேதி வெளியான டைம்அவுட் துபாய் எனும் இணையதளத்திலும், ” ஹிந்த் என்பதற்கு துணிச்சலான மற்றும் தைரியமான என்பது மட்டும் இல்லாமல் ஒட்டக கூட்டம் எனும் இன்னொரு பொருளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, அரேபியன் பிசினஸ், கல்ஃப் நியூஸ், காலீஜ் டைம்ஸ் உள்ளிட்ட அரபு செய்திகள் எதிலும் ஹிந்த் சிட்டி பெயர் மாற்றம் இந்தியா மற்றும் இந்து மதம் மையமாக வைத்து மாற்றப்பட்டதாகவோ அல்லது இந்தியா மற்றும் இந்து மதப் பெயரை குறிப்பிடவோ இல்லை. இது தொடர்பாக துபாய் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
முடிவு :
நம் தேடலில், துபாய் ஆட்சியாளர் இந்தியா மற்றும் இந்து மதத்தை கெளரவிக்கும் வகையில் துபாயின் மின்ஹாத் மாவட்டத்திற்கு ஹிந்த் எனப் பெயரிட்டதாகப் பரவும் தகவல் தவறானது. அதிகாரப்பூர்வமாக அப்படி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும், ஹிந்த் என்பதற்கு அரபு மொழியில் வெவ்வேறு அர்த்தங்கள் இருப்பதையும், துபாய் ஆட்சியாளரின் மனைவியின் பெயரிலும் ஹிந்த் என்ற சொல் இடம்பெற்று இருப்பதையும் அறிய முடிகிறது.