துபாய் ஷார்ஜாவில் பேருந்தின் நிறம் காவிக்கு மாற்றப்பட்டதாகப் பரவும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
காவி நிரத்தில் மாறிய வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து துபாய் ஷார்ஜா அரசு பேருந்தும் காவி நிரமாக.
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்களின் நிறத்தை தேசியக் கொடிக்கு ஏற்ப மாற்றுவதாக கூறி காவி மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இரயில்களின் புகைப்படங்களை இரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டது. தேசியக் கொடி வண்ணத்தில் மாற்றுவதாக கூறி விட்டு வெறும் காவி நிறத்திற்கு மட்டும் மாற்றுவதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், காவி நிறத்தில் மாறிய வந்தே பாரத் இரயில்களை தொடர்ந்து துபாய் ஷார்ஜாவில் பொது போக்குவரத்து பேருந்துகள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.
காவி நிரத்தில் மாறிய வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து
துபாய் ஷார்ஜா அரசு பேருந்தும் காவி நிரமாக..
உபிஸ் & உண்டியல்ஸ் கதறுங்கடே 😂 pic.twitter.com/dg8LHAgzSA
— K.Ashok adv (@ashok777_kalam) July 10, 2023
தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதா மணி ட்விட்டரில், துபாய் மன்னருக்கு பிரதமர் மோடியை எந்த அளவுக்கு பிடிக்குமோ, அந்த அளவுக்கு ஆரஞ்சு நிறமும் பிடிக்கும் போல என இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படத்தில் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் உள்ள பேருந்தின் பக்கவாட்டில் ‘Sharjah transport’ என எழுதப்பட்டுள்ளது. அப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் அது பழைய புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.

‘Emirates News Agency’ எனும் தளத்தில் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி அப்புகைப்படத்தினை பதிவிட்டு அரபு மொழியில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை மொழிப்பெயர்த்துப் படித்ததில், பக்ரீத் பண்டிகை விடுமுறையை ஒட்டி ஷார்ஜாவில் உள்ள பொது போக்குவரத்து வழித்தடங்களில் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே தளத்தில் 2011, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட செய்தியிலும் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள பேருந்து படத்தினை பதிவிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
دشنت هيئة الطرق والمواصلات الشارقة 110 حافلة جديدة لأسطول المواصلات العامة بتكلفة إجمالية بلغت 70 مليون درهم. pic.twitter.com/TvfrnK0kaJ
— هيئة الطرق و المواصلات في الشارقة (@RTA_Shj) October 23, 2019
மேற்கொண்டு இது குறித்துத் தேடியதில், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷார்ஜா அரசு புதிதாக 110 பொது போக்குவரத்துக்கான பேருந்துகள் வாங்கியது தொடர்பாக அவர்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளனர். அதிலுள்ள பேருந்தின் நிறம் நீல நிறத்திலேயே உள்ளது.
அதே போல் துபாயில் உள்ள வேறு சில பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ததிலும், நீலம் மற்றும் சிகப்பு நிற பேருந்துகளையும் காண முடிந்தது.
இவற்றில் இருந்து ஷார்ஜாவில் உள்ள ஆரஞ்சு நிற பேருந்துகள் மோடி பிரதமர் ஆவதற்கு முன்பாக 2011ம் ஆண்டில் இருந்தே அங்கு இயக்கப்படுவதை உறுதி செய்ய முடிகிறது. அதுமட்டும் இன்றி 2019ல் அவர்கள் வாங்கிய பேருந்துகள் நீல நிறத்திலும் உள்ளது. எனவே ஆரஞ்சு நிற பேருந்து என்பது தற்போது மாற்றப்பட்டது கிடையாது.
முடிவு :
நம் தேடலில், துபாய் ஷார்ஜாவில் பொது பேருந்துகள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. பரவக் கூடிய புகைப்படம் 2011ம் ஆண்டு முதலே செய்திகளில் உள்ளது. அதேபோல், சமீபத்தில் ஷார்ஜாவில் நீல நிறத்திலும் பேருந்துகளை வாங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.